`ஹமாஸ், விடுதலைப்புலிகள் அமைப்புக்களை ஐரோப்பிய ஒன்றிய தீவிரவாத அமைப்புகள் பட்டியலில் இருந்து நீக்கவேண்டியிருக்கும் `

ஐரோப்பிய ஒன்றியம், பாலத்தீன இஸ்லாமியவாதக் குழுவான ஹமாஸ் மற்றும் இலங்கையை சேர்ந்த பிரிவினைவாத குழுவான விடுதலைப்புலிகள் ஆகிய அமைப்புக்களை தனது தீவிரவாத அமைப்புகள் குறித்த பட்டியலில் இருந்து நீக்க வேண்டியிருக்கும் என ஒரு ஐரோப்பிய உயர் நீதிமன்றத்தின் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption ஹமாஸ் 2006ல் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, இஸ்ரேலுடன் மூன்று மோதல்களில் ஈடுபட்டது.

அந்த நீதிமன்றம் 2014ல் அந்த அமைப்புகள், தீவிரவாத குழு என்ற வகைப்பாட்டை மறு மதிப்பீடு செய்ததன் காரணமாக இல்லாமல், அவை தொழில்நுட்ப அடிப்படையில் தான் நீக்கப்படவேண்டும் என்று தீர்ப்பளித்தது. 28 அரசாங்கங்களை பிரதிநித்துவப்படுத்தும், ஐரோப்பிய ஒன்றியத்தின் கவுன்சில், மேல்முறையீடு செய்தது.

தற்போது ஐரோப்பிய நீதிமன்ற ஆலோசகர் இந்த மேல்முறையீட்டை நிராகரிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளார்.

தலைமை வழக்கறிஞர் என்று அறியப்படும், ஆலோசகரின் கருத்து முடிவானது அல்ல. ஆனால் பொதுவாக, ஐரோப்பிய நீதிமன்றம் தீர்ப்பை அளிக்கும் போது அது பொதுவாகப் பின்பற்றப்படுகிறது.

அமெரிக்காவில் 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி அன்று நடந்த தாக்குதலுக்கு பிறகு, ஐரோப்பிய ஒன்றியம், எந்த ஒரு குழுவின் நிதிச் சொத்துக்களை முடக்கவும், காவல் துறை மற்றும் நீதிமன்ற அதிகாரிகள் ஒன்றிணைந்து செயல்படுவதை மேம்படுத்தவும் உதவும் வகையில், ஒன்றியத்தின் தீவிரவாத குழுவின் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

குர்து போராளிக் குழுவான பிகேகே, லெபனானின் ஹெஸ்பொல்லா அமைப்பின் ராணுவப் பிரிவு மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் போன்ற பாலத்தீன போராளிக் குழுக்கள் 23 குழுக்கள் மற்றும் தனி நபர்கள் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

ஹமாஸ் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்புகளை அந்த பட்டியலில் இருந்து நீக்குவது குறித்து எந்த விதமான இறுதி முடிவும், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் பல நாடுகளின் அரசுகள் தயாரித்துள்ள பட்டியல்களை பாதிப்பதாக இருக்கும் என்று கருதமுடியாது.

ஒரு ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி பி பி சியிடம் பேசுகையில், அந்த தீவிரவாத குழுக்கள் பற்றிய பட்டியல் பல பன்னாட்டு அரசுகளின் முடிவுகளின் அடிப்படையில் தான் தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த பட்டியலின் அடிநாதமாக உள்ள சம்பந்தப்பட்ட நாடுகளின் சட்டங்களை இது கேள்விக்குட்படுத்தாது என்றார்.

ஆனால் இந்த இரண்டு குழுக்களும் அந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டால், அது அந்த இரண்டு குழுக்களுக்கும் ,அவை நிதி திரட்டும் திறனுக்கும் குறிப்பிடத்தக்கதாக இருக்கும் என்றார்.

படத்தின் காப்புரிமை ISHARA S.KODIKARA/Getty Images
Image caption இலங்கையில் அரசுக்கும் விடுதலைப்புலிகள் அமைப்பிற்கும் இடையில் நடந்த போரின் பொது மக்கள் பலரும் பாதிக்கப்பட்டனர். (கோப்புப்படம்)

ஹமாஸ், எப்போதும் தான் ஒரு எதிர்ப்பு இயக்கம்தான், பயங்கரவாத அமைப்பல்ல என்று வாதிட்டுவருகிறது. ஆனால் அதன் கொள்கைப் பிரகடனத்தில் அது இஸ்ரேலின் அழிப்பை மேற்கொள்ள உறுதியாக இருக்கிறது.

விடுதலைப்புலிகள் இப்போது ஒரு ராணுவ சக்தியல்ல

ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, கனடா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் ஹமாஸை ஒரு பயங்கரவாதக் குழுவாக கருதுகின்றன.

2006ல் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, அடுத்த ஆண்டு ஹமாஸ் காசாவில் உள்ள ஃபத்தா என்ற தனது போட்டியாளர்களை வெளியேற்றியது. அதற்கு பிறகு இஸ்ரேலுடன் மூன்று மோதல்களில் ஈடுபட்டது.

விடுதலைப் புலிகள் 2009 ல் இலங்கை இராணுவத்தால் தோற்கடிக்கப்பட்டனர் மற்றும் இப்போது ஒரு இராணுவ சக்தியாக அவர்கள் இல்லை.

ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்ற தலைமை அரசு வழக்கறிஞர் பேசுகையில், ஒன்றியத்தின் கவுன்சில் இந்த இரண்டு குழுக்களையும் தவறாக தீவிரவாத அமைப்பு என்று வரையறுத்தத்தில் நடைமுறைப்பிழைகள் செய்துவிட்டது என்றார்.

ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுள்ள மனித உரிமைகள் போலவே அந்த அரசாங்கங்களும் கொண்டுள்ளனவா என்று சோதிக்காமல், கவுன்சில் தவறாக அரசாங்கங்கள் வழங்கிய தீர்ப்புகளை நம்பியது என்றார் அவர்.

மேலும் அவர் ஊடகங்கள் மற்றும் இணையத்தில் உள்ள ஆதாரங்களை நம்பியிருக்க கூடாது என்று தெரிவித்தார்.