இலங்கை: சுண்டிக்குளத்தில் வெடிக்காத நிலையில் விமானக்குண்டு மீட்பு

இலங்கை, கிளிநொச்சி மாவட்டம் சுண்டிக்குளம் பகுதியில் கிஃபிர் தாக்குதல் விமானக் குண்டு ஒன்று வெடிக்காத நிலையில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Image caption சுண்டிக்குளத்தில் வெடிக்காத நிலையில் விமானக்குண்டு மீட்பு

சுண்டிக்குளம் காட்டுப் பகுதியில் விறகு தேடச் சென்ற ஊர்வாசிகள் இந்த குண்டு கிடந்ததைக் கண்டு, தர்மபுரம் காவல்துறையினருக்கு வழங்கிய தகவலையடுத்து, இதனை விசேட அதிரடிப்படையினர் மீட்டு எடுத்துச் சென்றுள்ளனர்.

ஆறு அடி உயரமும், மூன்று அடி சுற்றளவும் கொண்ட இந்தக் குண்டு 300 கிலோ நிறை கொண்டது என விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

Image caption விசேட அதிரடிப்படையினர்

இந்தக் குண்டு சனியன்று கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, கிளிநோச்சி நீதிமன்றத்தின் அனுமதி பெற்று தர்மபுரம் காவல்துறையினர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டதையடுத்து, விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கும் பிரிவினர் இதனைப் பாதுகாப்பாகக் காட்டுப்பகுதியில் இருந்து ஞாயிறன்று எடுத்து தம்முடன் கொண்டு சென்றுள்ளனர்.

விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையில் சண்டை நடைபெற்றபோது, கிஃபிர் தாக்குதல் விமானத்தில் இருந்து இந்தக் குண்டு ஏவப்பட்டு வெடிக்காத நிலையில் மண்ணில் புதைந்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

இந்த விமானக்குண்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தர்மபுரம் காவல்துறையினர் மேல் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய தலைப்புகள்