இலங்கை: சம்பள உயர்வு விவகாரத்தில் மலையகத் தொழிலாளர்கள் மீண்டும் ஆர்ப்பாட்டம்

இலங்கையில் மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள தோல்வியையடுத்து தங்களுக்கு நியாயமான சம்பள உயர்வு கோரி தொழிலாளர்கள் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Image caption நியாயமான சம்பள உயர்வை வலியுறுத்தும் தொழிலாளர்கள்

17 மாதங்களாக நடைபெற்ற 9 சுற்று பேச்சுவார்த்தை

தோட்ட உரிமையாளர்கள் சம்மேளனத்திற்கும், தொழிற்சங்களுக்கும் இடையில் கடந்த 17 மாதங்களாக 9 சுற்று பேச்சுக்கள் நேரடியாகவும் உரிய அமைச்சர்கள் முன்னிலையிலும் நடைபெற்றுள்ளன. இதுவரையில் தீர்வு இல்லை.

இறுதியாக கடந்த வியாழக்கிழமை நடைபெற்று முடிந்த பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்துள்ள நிலையில் தோட்ட நிர்வாகங்களுக்கும், அரசாங்கத்திற்கும் அழுத்தம் கொடுக்கும் வகையில் ஆர்பாட்டங்களிலும், கவன ஈர்ப்பு போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

Image caption பொகவந்தலாவ பொகாந்த தோட்டத்தில் ஆர்ப்பாட்டம்

தோட்ட உரிமையாளர்கள் சம்மேளனத்திற்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கூட்டு ஓப்பந்தம் விரைவாக புதுப்பிக்கப்பட்டு தங்களின் உழைப்புக்கேற்ப நியாயமான சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடக்கம் நிலுவையுடன் அதிகரித்த சம்பள கொடுப்பணவு கிடைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் இந்த போராட்டங்களின் போது தொழிலாளர்களினால் வலியுறுத்தப்படுகின்றன.

தங்கள் கோரிக்கைகளை தோட்ட உரிமையாளர்கள் சம்மேளனத்திடம் கையளிக்கும் வகையில் தொழிலாளர்களினால் ஒப்பமிடப்பட்ட மனுக்களும் தோட்ட நிர்வாக அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டன.

தங்களின் கோரிக்கைகள் தொடர்பாக ஒரு வார காலத்திற்குள் சாதகமான பதில் இல்லையேல் உண்ணாவிரத போராட்டமாக தங்கள் போராட்டம் வடிவம் பெறும் என தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

10 லட்சம் பேரின் வாழ்வாதாரம் பாதிப்பு

இலங்கையிலுள்ள 848 பெருந் தோட்டங்களில் சுமார் 2 இலட்சம் தொழிலாளர்கள் பதிவு செய்யப்பட்டவர்களாகவும், சுமார் 50 ஆயிரம் பேர் பதிவு செய்யப்படாத தொழிலாளர்களாகவும் வேலை செய்வதாக இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் கூறுகின்றார்.

குறித்த தொழிலாளர்களின் உழைப்பிலே அவர்களின் குடும்பங்களை சார்ந்த சுமார் 10 இலட்சம் பேரின் வாழ்வாதாரம் தங்கியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

செயலிழந்துள்ள கூட்டு ஒப்பந்தம்

2013ம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் கடந்த ஆண்டு மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்தது.

அந்த ஒப்பந்தத்தின்படி, தற்போது அடிப்படை சம்பளம் 450 ரூபாய் ஆகும். இதனைத்தவிர ஊக்குவிப்பு கொடுப்பனவாக 140 ரூபாயும் குறை நிரப்பு கொடுப்பனவாக 30 ரூபாயும் என நாளொன்றுக்கான கொடுப்பனவாக ரூபாய் 620ம் கிடைக்கின்றது.

Image caption சுமார் 2 லட்சம் பேர் தோட்டங்களில் வேலை செய்கின்றர்கள்

75 சதவீதம் வேலை நாட்கள் சமூகமளித்தால் மட்டுமே ஊக்கவிப்பு கொடுப்பனவு கிடைக்கும். 75 சதவீதத்திற்கும் குறைவான நாட்கள் வந்திருந்தால் அதனை பெற முடியாது.

தொழிற்சங்கங்களினால் முன்வைக்கப்பட்ட சம்பள அதிகரிப்பு கோரிக்கை தொடர்பாக இரு தரப்பினருக்குமிடையில் தொடரும் இழுபறி காரணமாக அந்த ஒப்பந்தத்தை புதுப்பிப்பதில் தடைகளும், தாமதங்களும் 17 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து நீடிக்கின்றன.

புதிய அரசாங்கம் பதவிக்கு வந்தவுடன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அரசு ஊழியர்களுக்கு ஆக குறைந்தது ரூபாய் 10 ஆயிரம் சம்பள அதிகரிப்பு கிடைத்தது. அது போன்ற தனியார் துறையினருக்கும் நாடாளுமன்றத்தில் சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டு ஒரு தொகை சம்பள உயர்வு கிடைத்தது. பெருந் தோட்டத்துறையினருக்கு தான் தற்போதைய வாழ்க்கைச் செலவுக்கேற்ப அது இன்னமும் எட்டுவதாக இல்லை.

அரசினால் இடைக்கால கொடுப்பனவாக ரூபாய் 2500 அறிவிக்கப்பட்டிருந்தது. அக்கொடுப்பனவு ஜுன், ஜுலை மாதங்கள் மட்டுமே தொழிலாளர்களுக்கு கிடைத்தது.

யோசனைகள் நிராகரிப்பு

ஏற்கனவே நாளொன்றுக்கு 1000 ரூபாய் சம்பள கோரிக்கையை தொழிற்சங்கங்கள் முன் வைத்திருந்தன. பெருந் தோட்டத்துறை அமைச்சர் நவீன் திஸநாயக்காவின் தலையீட்டின் பேரில் தொழிற்சங்கங்கள் ரூபாய் 720 என இறங்கி இணக்கம் தெரிவித்திருந்தன.

அடிப்படை சம்பளம் ரூபாய் 550. ஊக்குவிப்பு கொடுப்பனவு ரூபாய் 190 மற்றும் குறை நிரப்பு கொடுப்பணவு ரூபாய் 30 என தெரிவிக்கப்பட்டிருந்த இது தொடர்பான யோசனைளை ஆரம்பத்தில் தோட்ட உரிமையாளர்கள் சம்மேளனம் கொள்கையளவில் ஏற்றுக் கொண்டிருந்தன. இறுதி பேச்சுவார்த்தையின் போது சம்மேளனம் அதனையும் நிராகரித்து விட்டது.

1972ம் ஆண்டு தொடக்கம் நடைமுறையிலுள்ள சம்பள முறைமையை மாற்றிமைக்கும் வகையில் தோட்ட உரிமையாளர்கள் சங்கத்தினால் மாற்று யோசனையொன்று முன் வைக்கப்பட்ட போது அதனை தொழிற்சங்கங்கள் நிராகரித்துள்ளன.

Image caption கவன ஈர்ப்பு போராட்டம்

ரூபாய் 550 அடிப்படை சம்பளம் உள்ளிட்ட ஏனைய கொடுப்பனவுகளுடன் ரூபாய் 700 நாள் சம்பளமாக வழங்கப்படும். 11 கிலோவிற்கு மேல் பறிக்கப்படும் கொழுந்துக்கு கிலோவிற்கு ரூபா 25 என மேலதிகமாக வழங்கப்படும். வாரத்தில் 3 நாள் மட்டுமே வேலை நாட்களாகும். ஏனைய நாட்களில் பறிக்கப்படும் கொழுந்தின் நிறைக்கேற்ப கொடுப்பணவு வழங்கப்படும் என்று அந்த யோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளாந்தம் பறிக்கப்படும் கொழுந்தின் நிறை தோட்டத்திற்கு தோட்டம் வேறுபட்டது. கால நிலையை பொறுத்தும் அதில் மாற்றம் ஏற்படுவதால் அது சாத்தியப்படாது என்பதிலும் 6 நாட்கள் வேலை வழங்கப்பட வேண்டும் என்பதிலும் தொழிற்சங்கங்கள் உறுதியான நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றன.

தேயிலை உற்பத்தி, ஏற்றுமதி, உலக சந்தையில் விலை என அனைத்திலும் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக தேயிலை தோட்டங்கள் நஸ்டத்திலே இயங்குவாத தோட்ட நிர்வாகங்கள் தமது பக்க நியாயத்தை முன் வைக்கின்றன.

அப்படியானால் அரச தோட்டங்களை மீண்டும் அரசாங்கத்திடம் கையளிக்குமாறு தொழிற்சங்களும், தொழிலாளர்களும் தோட்ட நிர்வாகங்களும் வலியுறுத்துகின்றன.

தொடர்புடைய தலைப்புகள்