அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்திய வழக்கில் கோட்டாபய ராஜபக்ஷவை பிணையின் கீழ் விடுதலை செய்ய உத்தரவு

அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்பட எட்டு சந்தேக நபர்களை கடும் நிபந்தனைகள் கொண்ட பிணையின் கீழ் விடுதலை செய்யுமாறு கொழும்பு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ (கோப்புப்படம்)

கடந்த ஆட்சிக் காலத்தில் அவான்கார்ட் எனும் தனியார் நிறுவனமொன்றுக்கு ஆயுத கப்பல் ஒன்றை நடத்த அனுமதி வழங்கியதன் முலம் அரசாங்கத்திற்கு சுமார் 11.4 பில்லியன் ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக ஊழல் விசாரணை ஆணைக்குழு அளித்த குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் பாதுகாப்பு செயல்லாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்று முன்னாள் கடற்படை தளபதிகள் உள்பட எட்டு பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செயப்பட்டது.

இந்த வழக்கு இன்று அழைக்கப்பட்ட போது கருத்து தெரிவித்த கோட்டாபய ராஜபக்ஷ தரப்பின் வழக்கறிஞர், ஊழல் விசாரணை ஆணைக்குழு முறையாக இந்த வழக்கை தாக்கல் செய்ய தவறியுள்ள காரணத்தினால் சந்தேக நபர்களை விடுதலை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால் அந்த வேண்டுகோளை நிராகரித்த நீதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்பட சந்தேக நபர்களை இருபது மில்லியன் ரூபாய் சரீர பிணையின் கீழ் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

சந்தேக நபர்களின் வெளிநாட்டு பயணங்களை தடை செய்த நீதிபதி, விசாரணை எதிர்வரும் மூன்றாம் தேதி நடத்தப்படுமென்று அறிவித்தார்.

வழக்கு விசாரணை முடிவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கோட்டாபய ராஜபக்ஷ , யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வர உதவிய மூன்று கடற்படை தளபதிகள் இன்று நீதிமன்ற சிறைக் கூடத்தில் சில மணி நேரங்கள் தடுத்து வைக்கப்பட்டதாக குற்றம்சாட்டினார்.

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வேண்டுகோள்களை விடுத்து வருவதாக தெரிவித்த கோட்டாபய ராஜபக்ஷ , கடந்த ஆட்சிக் காலத்தில் அவர் அவ்வாறு செயல்படவில்லை என்று தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு சம்பந்தமாக அரசாங்கம் குறைந்த கவனத்தை செலுத்துவதன் காரணமாகவே இந்த நிலை எட்டியுள்ளதாக தெரிவித்த கோட்டாபய ராஜபக்ஷ, இது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்துவது அவசியமென்று மேலும் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற போது நீதிமன்றம் வந்திருந்தார்.

தொடர்புடைய தலைப்புகள்