இனவாதத்தை தூண்டியதாக எழுந்த விமர்சனத்திற்கு விக்னேஸ்வரன் பதில்

  • 1 அக்டோபர் 2016

இதுவரை காலமும் அமைதியாக இருந்த மக்கள் தற்போது தங்களுடைய தேவைகள் அபிலாசைகளை வெளிப்படுத்தும்போது, நாட்டின் தென்பகுதி உணர்ச்சிவசப்பட்டு எழுகின்றது என்று வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் இன்று கிளிநொச்சியில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றுகையில் தெரிவித்திருக்கின்றார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் (கோப்புப்படம்)

கடந்த வாரம் தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், வடமாகாண முதலமைச்சர் தலைமையில் எழுக தமிழ் என்ற மகுடத்தில் பேரணியொன்று நடைபெற்றது.

யுத்தத்தின் பின்னர் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டிய தமது தேவைகள், கோரிக்கைகள், அபிலாசைகள் குறித்து இந்தப் பேரணியில் கலந்து கொண்டிருந்தவர்கள் குரல் எழுப்பியிருந்தனர்.

அவர்களின் மன உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் பௌத்த மக்கள் குடியிருக்காத இடங்களில் தமிழ் மக்களுடைய பிரதேசங்களில் நிறுவப்பட்டுள்ள புத்தர் சிலைகளையும், நிர்மாணிக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைகளையும் அகற்ற வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளின் ஒன்றாக விக்னேஸ்வரன் ஆற்றிய உரையில் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து, வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் இனவாதத்தைத் தூண்டும் வகையில் உரையாற்றியிருக்கின்றார், தற்போது ஏற்பட்டுள்ள நல்லிணக்க முயற்சிகளைக் குழப்பும் வகையில் அவர் இனவாத நஞ்சை தமிழ் மக்கள் மனங்களில் விதைத்திருக்கின்றார் எனக் கூறி அவரை பொதுபலசேனா என்ற பௌத்த கடும்போக்காளர்களைக் கொண்ட அமைப்பு நேற்று வெள்ளிக்கிழமை வவுனியாவில் கண்டனப் பேரணியொன்றை நடத்தியிருந்தது.

இதைவிட தென்பகுதியைச் சேர்ந்த பல்வேறு சிங்கள அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களும்கூட, விக்னேஸ்வரன் இனவாதத்தைத் தூண்டி பிரிவினைவாத கோஷம் எழுப்பியிருக்கின்றார் என கடும் தொனியில் விமர்சித்திருந்தார்கள்.

இந்த விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அவர் கிளிநொச்சியில் இன்று சனிக்கிழமை ஆற்றிய உரையில் இதுகால வரையில் அமைதியாக இருந்த மக்கள், இப்போது ஏற்பட்டுள்ள சூழலில் தங்களுடைய அபிலாசைகளுக்காக அண்மையில் நடைபெற்ற (எழுக தமிழ் பேரணி) ஒரு நிகழ்வில் குரல் கொடுத்தமைக்காக தன்னை விமர்சிக்கின்றார்கள் என கூறியிருக்கின்றார்.

'இதுவரை காலமும் நாங்கள் வாய் மூடி மௌனிகளாக இருந்ததால், எங்களுக்குப் பிரச்சினைகள் இல்லை. நடப்பவையெல்லாம் திருப்தியாக இருக்கின்றது என்று அவர்கள் எண்ணியிருந்தார்கள். இப்போது வாய்திறந்து எங்களுடைய எதிர்பார்ப்புக்களை தேவைகளை வெளியிடும்போது அதனைப் பலரும் இப்போது விமர்சிக்கின்றார்கள்' என்றார் விக்னேஸ்வரன்.

மக்கள் தமது மௌனத்தை இப்போது கலைத்ததன் மூலம் உண்மை நிலைமை வெளிப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.