இலங்கை: இனவாதத்தை தடுத்து நிறுத்திட சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரிக்கை

நாட்டின் தென்பகுதியில் எழுந்துள்ள இனவாதத்தையும், கூச்சல்களையும் தடுத்து நிறுத்துவதற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கூட்டணிக் கட்சியாகிய ஈபிஆர்எல்எஃப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Image caption சுரேஷ் பிரேமச்சந்திரன்

வவுனியாவில் பதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள அக்கட்சியின் அலுவலகத்தைத் திறந்து வைத்து உரையாற்றுகையில், அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

இதுவரையில் தீர்த்து வைக்கப்படாமல் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும், தமிழ் மக்களின் உரிமைகள் புதிய அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காகவே கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் 'எழுக தமிழ்' பேரணி நடத்தப்பட்டதாகவும், அதனை இனவாதமாகத் திரித்துக் கூறி தெற்கில் இனவாதம் தலைதூக்கியிருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

அரசாங்க அமைச்சர்களும் அரசியல்வாதிகளும் தமிழருக்கு எதிராக இனவாதக் கருத்துக்களைக் கூறி வருவதைக் கண்டிக்காமல் ஜனாதிபதியும், பிரதமரும் மௌனம் காத்திருப்பதாகவும், இந்த நிலைமை தொடருமானால், புதிய அரசியலமைப்பில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாமல் போய்விடும் என்றும் அவர் எச்சரிக்கை செய்துள்ளார்.

சிங்கள மக்களுக்கு எதிராகத் தமிழ் மக்களோ, எழுக தமிழ் நிகழ்வோ, இனவாத கருத்துக்களை முன்வைக்கவில்லை அல்லது மதவாத கருத்துக்களை முன்வைக்கவில்லை என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்.

வடமாகாணத்தில் ஒன்றரை லட்சம் ராணுவத்தினர் நிலைகொண்டுள்ளார்கள். இது தேவைக்கு அதிகமானதாகும். எனவே, தேவைக்கு மேலாக இருக்கின்ற ராணுவத்தை வடக்கில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பதே தமிழ் மக்களின் கோரிக்கை என்று மேலும் தெரிவித்தார்.

தனியார் காணிகளிலும், இந்து ஆலய காணிகளிலும், அதே நேரம் சிங்கள மக்கள் இல்லாத இடங்களிலும் புத்தர் சிலைகளையும், பௌத்த விகாரைகளையும் அகற்ற வேண்டும் என்பதே தமிழ் மக்களின் கோரிக்கையாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனை இனவாதமாகச் சித்தரித்து தெற்கில் எழுந்துள்ள இனவாதப் போக்கையும் கூச்சல்களையும் அரதசாங்கம் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

தொடர்புடைய தலைப்புகள்