இலங்கை பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்து சுவிஸ் அமைச்சர் - விக்னேஸ்வரன் ஆலோசனை

இலங்கை வந்துள்ள சுவிஸ் நாட்டின் பெடரல் கவுன்சில் உறுப்பினரும், நீதி மற்றும் காவல்துறை அமைச்சருமாகிய சிமோனிட்டா சொமருகா, வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை, இன்று யாழ்ப்பாணத்தில் சந்தித்து, இலங்கையின் பிரச்சினைகளைத் தீர்த்து, எவ்வாறு சுமூகமான உறவைக் கொண்டு வரலாம் என்பது குறித்து கலந்துரையாடியுள்ளார்.

Image caption வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் சுவிஸர்லாந்து அமைச்சர் சிமோனிட்டா சொமருகா

இந்தச் சந்திப்பின்போது நாட்டின் நல்லிணக்க நிலைமைகளைக் கேட்டறிந்த சுவிட்ஸர்லாந்து அமைச்சரிடம், தற்போதுள்ள நிலைமைகள் தொடருமேயானால் நல்லிணக்கத்தைக் கொண்டு வருவது கடினமான காரியமாக இருக்கும் என்பதை எடுத்துக் கூறியதாக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

குறிப்பாக ராணுவம் ஆக்கிரமிப்பு ரீதியில், பொதுமக்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களைக் கைப்பற்றி வைத்துக்கொண்ருப்பது இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றத்திற்குப் பெரும் இடைஞ்சலாக இருப்பதை எடுத்துக் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.

காணிகள் விடுவிப்பு, பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கி, சிறைச்சாலையில் உள்ள தமிழ்க் கைதிகளை விடுதலை செய்வது போன்ற அழுத்தும் பிரச்சினைகளுக்கு உடன் தீர்வு காண வேண்டியது அவசியம் என்று தெரிவித்த விக்னேஸ்வரன், இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டாலேயொழிய நாட்டில் நல்லிணக்கத்தையும், ஐக்கியத்தையும் ஏற்படுத்துவது சிரமமான காரியமாகவே தொடரும் என்றும் விக்னேஸ்வரன் கூறினார்.

தொடர்புடைய தலைப்புகள்