இலங்கை: 'சைலன்ஸ் இன் த கோர்ட்ஸ்' திரைப்படத்தை வெளியிட நீதிமன்றம் தடை

  • 5 அக்டோபர் 2016

திரைப்பட இயக்குனர் பிரசன்னா விதானகே தயாரித்த சிங்கள மொழி ஆவணப்படமான, `உசாவிய நிஹன்டயி` ( Silence in the Courts) எனும் திரைப்படத்தை வெளியிடுவதைத் தடுத்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இலங்கை உச்சநீதிமன்றம் (கோப்புப் படம்)

முன்னாள் மாஜிஸ்ட்ரேட் லெனின் ரத்னாயக்க தாக்கல் செய்த புகாரொன்றை ஆராய்ந்த பின்னர், நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

தான் மஹாவ மாஜிஸ்ட்ரேட் நீதிபதியாக கடமையாற்றிய போது, வழக்கு விசாரணைக்கு வந்திருந்த பெண் ஒருவரை பாலியல் ரீதியில் பலாத்காரத்திற்கு உட்படுத்தியதாக பொய் குற்றச்சாட்டுக்கள் அடங்கிய செய்திகள் சில ஆண்டுகளுக்கு முன்னர் சில ஊடகங்கள் முலம் பிரசுரிக்கப்பட்டதாக, முன்னாள் நீதிபதி ரத்னாயக்க நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த குற்றச்சாட்டுக்களை நிராகரித்த முன்னாள் நீதிபதி ரத்னாயக்க, இது தொடர்பாக தனக்கு எதிராக போலீசாரிடம் இதுவரையிலும் எந்தவொரு புகாரும் முன்வைக்கப்படவில்லை என்று நீதிமன்றத்தில் அறிவித்தார்.

அந்த அடிப்படையற்ற தகவல்களை பயன்படுத்தி சம்பந்தப்பட்ட திரைப்படம் உருவாக்கப்பட்ட தெரிவித்த முன்னாள் நீதிபதி ரத்னாயக்க, இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் திரையிடப்பட்டால் தனக்கும், நீதித்துறைக்கும் பெரும் அவமானம் ஏற்படுமென்று கூறினார்.

எனவே, சம்பந்தப்பட்ட திரைப்படம் நாளை வெளியிடுவதை தடை செய்யும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு முன்னாள் நீதிபதி லெனின் ரத்னாயக்க நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார்.

கருத்துக்களை ஆராய்ந்த நீதிபதி சம்பந்தப்பட்ட திரைப்படத்தை வெளியிடுவதை வரும் 19 ஆம் தேதி வரை தடை செய்யும் உத்தரவொன்றை பிறப்பித்தார்.

அன்றைய தினம் இந்த புகார் குறித்து நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு நீதிமன்றம் தயாரிப்பாளர் பிரசன்னா விதானகேவிற்கு உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்