காலி புற்றுநோய் மருத்துவமனைக்கு நிதி திரட்ட யாழ்ப்பாணத்தில் இருந்து தொடங்கப்பட்ட நடை பயணம்

இலங்கையின் தென் பகுதியில் உள்ள காலி மாவட்டம் கராப்பிட்டி மருத்துமனையில், புற்றுநோயாளர்களுக்கென தனிப்பிரிவு ஒன்றை நிர்மாணிப்பதற்கு நிதி சேகரிப்பதற்கென யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் இருந்து நடை பயணமொன்று இன்று (வியாழக்கிழமை) ஆரம்பமாகியுள்ளது.

Image caption யாழ்ப்பாணத்தில் இருந்து துவங்கிய நடைபயணம்

பருத்தித்துறையில் நடைபெற்ற தொடக்க நிகழ்வில் இலங்கை கிரிக்கெட் நட்சத்திரங்களான குமார் சங்கக்கார, மகேல ஜயவர்தன, பாலிவுட் நட்சத்திரம் ஜாக்குலன் பெர்னாண்டஸ், பாப் பாடகர்களான சந்தூஷ், பாத்தியா மற்றும் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், வடமாகாண சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சத்தியலிங்கம், வடபகுதியைச் சேர்ந்த கடற்படை மற்றும் ராணுவ உயரதிகாரிகள் மதத் தலைவர்கள், சமூக முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Image caption தொடக்க விழாவில் கலந்து கொண்ட இலங்கை கிரிக்கெட் நட்சத்திரங்கள் குமார் சங்கக்கார, மகேல ஜயவர்தன மற்றும் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன்

விளையாட்டுத்துறை மற்றும் சமூக பிரபல்யமிக்கவர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் தலைமையில் சுமார் 800-க்கும் மேற்பட்டவர்களைக் கொண்டதாக இந்த நடைபயணம் நடைபெறவுள்ளது.

இதன் மூலம் ஐந்து மில்லியன் ரூபாய் நிதி சேகரிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக, 'ட்ரெயில்' என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த நடைபயணத்தின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

பருத்தித்துறையில் ஆரம்பமாகியுள்ள இந்த நடைபயணம், ஒரு நாளைக்கு 28, 30 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து 28 நாட்களில் தெற்குப் பகுதிக்கு சென்றடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முயற்சிக்கு சுமார் 2000 நன்கொடையாளர்கள் உதவி புரிய முன்வந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்