கட்சிகளை ஒருங்கிணைத்து அரசை எதிர்த்து போராட தயார்: மகிந்த ராஜபக்ஷ அறிவிப்பு
இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் கூட்டணி கட்சிகளை ஒன்று சேர்த்து தற்போதைய ஆளும் அரசாங்கத்திற்கு எதிராக போராட தான் தயார் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
கூட்டு எதிர் கட்சியினர் இன்று இரத்தினபுரி நகரில் நடத்திய கூட்டத்தில் உரையாற்றிய மகிந்த இதனை தெரிவித்தார்.
ஆளும் அரசானது தற்போது மக்கள் மத்தியில் அதிகளவு எதிர்ப்பை சந்தித்துள்ளதாக தெரிவித்த மகிந்த ராஜபக்ஷ, மிரட்டல்களின் மூலம் அரச விரோத குரல்களை முடக்க முயற்சித்து வருவதாக குற்றஞ்சாட்டினார்.
எனவே, அரசாங்கத்திற்கு எதிராக சகல கட்சிகள் மற்றும் கூட்டணிகளை ஒன்று திரட்டி போராட தான் தயார் என்று அவர் தெரிவித்தார்.
அரசாங்கத்தில் உள்ள பெரும் எண்ணிக்கையானோர் விரைவில் தன்னுடன் சேரவுள்ளதாக தெரிவித்த மகிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தின் ஆளும், எதிர் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை விரைவில் மாறுவதற்கான அவகாசம் இருப்பதாகவும், அதற்காக இரண்டு அல்லது முன்று வருடங்கள் காத்திருக்கும் அவசியம் இல்லை என்றும் தெரிவித்தார்.
மக்கள் தன்னிடம் எதிர்ப்பார்ப்பதை விரைவில் அவர்களுக்கு பெற்றுக்கொடுக்க தான் தயார் என்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.