இலங்கை: டிப்ளோமா பட்டம் பெற்ற ஆசிரியர்கள் நியமனத்தில் ஏற்பட்டுள்ள சர்ச்சைக்கு தீர்வு?

இலங்கையில் கல்வியல் கல்லூரிகளில் ஆசிரியர் டிப்ளோமா கல்வி முடித்து வெளியேறிய கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஆசிரியர்களில் ஒரு பகுதியினருக்கு வெளி மாகாண பாடசாலைகளில், மத்திய கல்வி அமைச்சிகத்தினால் நியமனம் வழங்கப்பட்டுள்ளது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலகம் அறிவித்துள்ளது.

Image caption ஆசிரியர் வேண்டி போராடும் மாணவர்கள்

இன்று (ஞாயிற்றுக்கிழமை), இது தொடர்பாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமது, பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேச்சுவர்த்தை நடத்தினார்.

அமைச்சு கிழக்கு மாகாணத்திலிருந்து கல்வியற் கல்லூரிகளில் கல்வியை முடித்து வெளியேறிய 407 ஆசிரியர்களில், 215 தமிழ் மொழி மூல ஆசிரியர்களை வெளி மாகாண பாடசாலைகளுக்கு மத்திய கல்வி அமைச்சு நியமனம் வழங்கியுள்ளமை தொடர்பாக கிழக்கு மாகாண சபைக்கும் மத்திய கல்வி அமைச்சுக்குமிடையில் கடந்த 2 வாரங்களாக சர்ச்சை நிலவியது.

அரசியல் யாப்பு 13-வது திருத்தத்தில் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை குறைக்கும் வகையில் மத்திய கல்வி அமைச்சகம் நடந்து கொள்வதாக மாகாண முதலமைச்சர் மத்திய கல்வி அமைச்சகம் மீது குற்றச்சாட்டையும் முன் வைத்திருந்தார்

இந்த விவகாரம் தொடர்பாக கிழக்கு மாகாண முதலமைச்சருக்கும், பிரதம மந்திரிக்குமிடையில் இடம் பெற்ற சந்திப்பு தொடர்பாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் வெளி மாகாண பாடசாலைகளுக்கு நியமனம் பெற்றுள்ள கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஆசிரியர்களுக்கு கிழக்கு பாடசாலைகளில் நியமனம் வழங்க பிரதம மந்திரி இணக்கம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இம்மாகாணத்தில் நிலவும் கணிதம் , விஞ்ஞானம் , ஆங்கில ஆசிரியர் பதவிகளு;கான 1134 வெற்றிடங்களை முழுமையாக நிரப்புவதற்கும் பிரதமர் அனுமதியளித்துள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

மாகாணத்தில் 5000 ஆசிரியர் வெற்றிடம்

Image caption முதலமைச்சரிடம் மனு அளிக்கும் ஆசிரியர்கள்

அரசாங்க கல்வியல் கல்லூரிகளில் மூன்று வருட டிப்ளோமா பயிற்சியை முடித்துக் கொண்ட 1014 தமிழ் மொழி மூல ஆசிரியர்கள் உள்ளிட்ட 3100 பேருக்கு, கடந்த வாரம் மத்திய கல்வி அமைச்சகத்தினால் நியமனம் வழங்கப்பட்டுள்ளது

கிழக்கு மாகாணத்திலிருந்து 337 தமிழ் மொழி மூல ஆசிரியர்களும், 70 சிங்கள மொழி ஆசிரியர்களும் என 407 பேர் இந்நியமனத்திற்கு தெரிவாகியிருந்தனர்.

இவர்களில் 70 சிங்கள மொழி மூல ஆசிரியர்களும், 122 தமிழ் மொழி மூல ஆசிரியர்களும் தவிர ஏனைய அதாவது தமிழ் மொழி மூல 215 பேரும் வடக்கு , ஊவா மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாண பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாணத்திலுள்ள 1108 மாகாண பாடசாலைகளில் கணிதம் , விஞ்ஞானம் , ஆங்கிலம் உள்ளிட்ட 5018 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை இருப்பதாக மாகாண கல்வி அமைச்சகம் சுட்டிக் காட்டியுள்ளது.

கணிதம் , விஞ்ஞானம் , ஆங்கிலம் பாடங்களுக்கான 1134 வெற்றிடங்களை நிரப்புவதற்கான போட்டிப் பரீட்சையில் 390 பேர் மட்டுமே புள்ளிகள் அடிப்படையில் தெரிவாகியுள்ளனர் . பிரதமருடன் இடம் பெற்ற சந்திப்பில் இந்த விண்ணப்பதாரிகளிலிருந்து மிகுதி 744 பேரையும் நியமனம் செய்ய அனுமதி கிடைத்துள்ளதாக முதலமைச்சர் ஊடக பிரிவு தெரிவிக்கின்றது.

இந்த ஆண்டு, இம்மாகாணத்தில் ஆசிரியர் பற்றாக்குறையை நீக்கக் கோரி கடந்த வாரம் 50-க்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு முன்பாக மாணவர்களும் பெற்றோர்களும் ஆர்பாட்டங்களிலும் ஈடுபட்டனர்

இந்த ஆர்பாட்டங்களின் போது அங்கு வருகை தரும் மாகாண அமைச்சர்கள் .மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளினால் ஆசிரியர் பற்றாக்குறை விரைவாக தீர்க்கப்படும் என உறுதி மொழிகளும் உத்தரவாதங்களும் வழங்கப்படுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய தலைப்புகள்