இலங்கை: மலையக தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப தொழிற்சங்கங்கள் கோரிக்கை

இலங்கையில் சம்பள உயர்வு கோரி போராட்டங்களில் ஈடுபட்டுள்ள மலையக பெருந் தோட்டத் தொழிலாளர்களை போராட்டத்தை கைவிட்டு வழமையான பணிக்கு திரும்புமாறு தொழிற்சங்கங்களினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Image caption மலையக பெருந் தோட்டத் தொழிலாளர்களை போராட்டம்

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தங்களுக்கு நாளாந்த ஊதியத்தை 1000 ரூபாயாக அதிகரிக்க கோரி, கடந்த இரு வாரங்களுக்கு மேலாக ஆர்பாட்டங்களிலும் போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளனர்.

தொழிற்சங்கங்களின் வேண்டுகோளை ஏற்று தொழிலாளர்கள் நாளை திங்கட்கிழமை முதல் வழமையான பணிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தொழிலாளர்களின் தொட்ர்ச்சியான போராட்டங்களின் எதிரொலியாக தொழில் அமைச்சும் பெருந் தோட்டத் துறை அமைச்சும் இந்த கோரிக்கை தொடர்பாக தலையிட்டு தற்போது வழங்கப்படும் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பான யோசனையை முன் வைத்தன.

தோட்ட நிர்வாகிகள் சம்மேளனத்திற்கும் கூட்டு ஓப்பந்த தொழிற்சங்களுக்குமிடையில் இணக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த வார இறுதியில் இரு தரப்பு கூட்டு ஓப்பந்தம் கைச்சாத்திடப்படலாம் என தொழிற்சங்கள் நம்பிக்கை கெண்டுள்ளன.

இதன் காரணமாகவே தொழிலாளர்களை போராட்டத்தை கைவிட்டு வழமையான பணிக்கு திரும்புமாறு கேட்டுள்ளதாக பிரதான தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கூறுகின்றது.

ஏற்கனவே 18 மாத காலமாக நடைபெற்ற 10ற்கும் மேற்பட்ட பேச்சுவார்த்தைகளில் சம்பள அதிகரிப்பு கோரிக்கையை நிராகரித்த தோட்ட நிர்வாகங்களின் சம்மேளனம் தொழிலாளர்களின் போராட்ட அழுத்தம் காரணமாகவே 730 ரூபாயாக சம்பளத்தை அதிகரிக்க இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் இ.தொ. கா உட்பட கூட்டு ஓப்பந்த தொழிற்சங்கள் தெரிவிக்கின்றன.

தொழிலாளர்களை போராட்டத்தில் ஈடுபடுமாறு எந்தவொரு தொழிற்சங்கமும் அழைப்பு விடுக்கவில்லை .அவர்கள் சுயமாகவே இந்த போராட்டஙகளில் குதித்ததாக கூறுகின்றார் இ.தொ. கா உப தலைவர்களில் ஒருவரான கணபதி கனகராஜ்.

'' 730 ரூபாயாக சம்பள அதிகரிப்பு போதாது. இருந்த போதிலும் உலக சந்தையில் தேயிலை விலை வீழ்ச்சி , கம்பனிகளின் தற்போதைய ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு இந்த இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது '' என்று பிபிசி தமிழோசையுடன் பேசிய அவர் கூறினார்.

அடுத்த சில நாட்களில் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ள நிலையில் தொடர்ந்து போராட்டங்களை செயவதன் மூலம் எவ்விதமான பெறுபேறுகளை பெற்றுக் கொள்ள முடியாது என்பதால் போராட்டங்கைளை கைவிட்டு வழமை போல் பணிக்கு திரும்புமாறு தொழிலாளர்களை கேட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

730 ரூபாய் சம்பள உயர்வுக்கு இணக்கம் ஏற்பட்டிருந்தாலும் 6 நாட்கள் வேலை வழங்குதல் உட்பட இன்னும் சில விடயங்கள் பேசி தீர்க்க வேண்டியுள்ளது . கூட்டு ஓப்பந்தம் கைச்சாத்திட முன்னதாக அவற்றை பேசி தீர்க்க முடியும் என்று கணபதி கனகராஜ் நம்பிக்கையும் வெளியிட்டார்

தொடர்புடைய தலைப்புகள்