இலங்கை: தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு கோரிக்கைக்கு வடக்கு, கிழக்கு மாகாண முதலமைச்சர்கள் ஆதரவு

இலங்கையில் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு கோரிக்கைக்கு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர்கள் உள்பட பல்வேறு தரப்பிலிருந்து ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image caption பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு கோரிக்கைக்கு ஆதரவளித்துள்ள 'ஈரோஸ்' அமைப்பினர்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர்கள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு கோரிக்கை நியாயமானது என்று தெரிவித்துள்ளனர்.

தற்போது நாளொன்றுக்கு வழங்கப்படும் 620 ரூபாய் சம்பளத்தை 730 ரூபாயாக அதிகரிக்க காணப்பட்டுள்ள இணக்கம் திருப்தியளிப்பதாக இல்லை என்று வட மாகாண முதலமைச்சர் சி. வி . விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

தோட்ட நிர்வாகிகளின் சம்மேளனமும், அரசாங்கமும் இந்த பிரச்சனையை மனிதாபிமான முறையில் அணுக வேண்டும் என்று அவர் கேட்டுள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்திற்கு வலு சேர்க்கும் தோட்டத் தொழிலாளர்கள், சம்பள உயர்வு கோரி வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபடுவது வேதனையைத் தருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமது தெரிவித்துள்ளார் .

இன்று (திங்கள் கிழமை) மட்டக்களப்பு நகரில், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஈரோஸ் ஜனநாயக முன்னனியின் ஏற்பாட்டில் ஆர்பாட்டமொன்று நடைபெற்றது.

கூட்டு ஒப்பந்தம் தொழிலாளர்களின் அடிமை சாசனம் அல்லவென்றும், தொழிலாளர்களின் உழைப்புக்கேற்ப ஊதியம் வழங்கப்பட வேண்டும் என ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் தலைவரான குணசீலன் சௌந்தராஜன், இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தெரிவித்தார்.

தொடர்புடைய தலைப்புகள்