இலங்கையில் வேலையற்ற பட்டதாரிகள் அரசு வேலை கேட்டு போராட்டம்

போராட்டம்

இலங்கையின் கிழக்கே வேலையற்ற பட்டதாரிகள், தங்களுக்கு அரச துறைகளில் வேலை வாய்ப்பு கோரி புதன்கிழமை மட்டக்களப்பு நகரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாண சபையில் 5000ற்கும் மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்கள் இருப்பதாக மாகாண முதலமைச்சரே ஓப்புக் கொண்டுள்ளார்.

இந்த வெற்றிடங்களில் தங்களுக்கு தொழில் வாய்ப்பை வழங்க முடியும் என ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட பட்டதாரிகளில் பலரும் கோரிக்கையை முன் வைத்தனர்.

அடுத்த மாதம் மத்திய அரசாங்கத்தின் வரவு - செலவு திட்டம் நாடாளுமன்றத்தில் முன் வைக்கப்படவுள்ள நிலையில் பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பு தொடர்பாகவும் அதில் கவனம் செலுத்தப்பட வேண்டும் பட்டதாரிகள் எதிர்பார்க்கின்றார்கள்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தும் வகையிலே இன்றைய போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக கூறுகின்றார்; மத்திய அரசினால் அரச துறைகளில் இறுதியாக 2012-ஆம் ஆண்டு மார்ச் 31-க்கு முன்பு சுமார் 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கப்பட்டது.

அதன் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் சுமார் 1400 பட்டதாரிகள் தொழில் இன்றி இருப்பதாக மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் சுட்டிக் காட்டுகின்றது.