பெருந்தோட்ட தொழிலாளர் சம்பள உயர்வு பேச்சுவார்த்தையில் உடன்பாடு கையெழுத்து

  • 18 அக்டோபர் 2016

இலங்கையில் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு உள்பட தொழில்சார் நலன்களை கொண்ட இரு தரப்பு கூட்டு உடன்படிக்கை 19 மாத கால இழுபறியின் பின்னர் இன்று செவ்வாய்க்கிழமை கைச்சாத்திடப்பட்டது.கடந்த 19 மாதங்களாக நீடித்த இந்த பிரச்சனை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

தோட்ட நிர்வாகிகளின் சம்மேளனத்திற்கும் தொழிற் சங்கங்களுக்குமிடையில் சர்வதேச முதலீட்டு வர்த்தக அமைச்சில் இந்த உடன்படிக்கை கைச்சாத்தானது.

Image caption இன்றும் தொடர்ந்த போராட்டம்

புதிதாக கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையின்படி தற்போது தேயிலை மற்றும் ரப்பர் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் 620 ரூபாய் தினசரி வேதனம் 730 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வருடத்தில் 300 நாட்கள் வேலையும் இந்த உடன்படிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலதிகமாக பறிக்கப்படும் தேயிலை கொழுந்து கிலோவிற்கு தற்போது 25 ரூபாயும் ரப்பருக்கு 30 ரூபாயும் வழங்கப்படுகிறது. இந்த கொடுப்பணவிலும், தொழிலாளர்களுக்கு 5 ரூபாய் அதிகரிப்பு கிடைக்கின்றது.

குறிப்பிட்ட 6 மாத காலத்திற்குள் தேயிலை தோட்டங்களை தோட்ட நிர்வாகங்கள் துப்பரவு செய்து கொடுக்க வேண்டும் என்றும் அந்த உடன்படிக்கை கூறுகின்றது

தங்களுக்கு 1000 ரூபா சம்பளமும் அதற்கான நிலுவை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடக்கம் வழங்கப்பட வேண்டும் என தொழிலாளர்கள் கடந்த 3 வாரங்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்ற போதிலும் புதிய உடன்படிக்கையில் நிலுவை கொடுப்பணவு பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

தேயிலை உற்பத்தி வீழ்ச்சி , உலக சந்தையில் தேயிலை விலை வீழ்ச்சி போன்ற காரணங்களை முன் வைத்து தோட்ட நிர்வாகங்களின் சம்மேளனம் கோரிக்கைகளை ஏற்கனவே நிராகரித்து விட்டது.

இம் மாதம் 15 - ஆம் திகதி தொடக்கம் புதிய உடன்படிக்கை நடைமுறைக்கு வருவதன் காரணமாகவே நிலுவை கொடுப்பணவுக்கு வாய்ப்பு இல்லாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது .

தோட்ட நிர்வாகங்களின் சம்ளேனத்திற்கும் தொழிற்சங்கங்களுக்குமிடையிலான இந்த உடன்படிக்கையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தேசிய தோட்ட தொழிலாளர் சங்கம் , பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு ஆகியன கைச்சாத்திட்டுள்ளன.

தொழிலாளர்கள் நலன்சார்ந்த தங்களின் கோரிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை புதிய உடன்படிக்கை முழுமையாக கொண்டிருக்கவில்லை என தொழிற்சங்கங்கள் கூறகின்றன.

தொழிற்சங்கங்கள் ஒப்புக்கொண்டது ஏன்?

உலக சந்தையில் தேயிலை விலை வீழ்ச்சி , தோட்டங்களின் தற்போதைய நிலை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே 730 ரூபாய் இணக்கம் தெரிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்ததாகவும் தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

தொழில் அமைச்சர் ஜோன் செனவிரட்ன, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸநாயக்கா , நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கா , சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம மற்றும் மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த அமரவீர உட்பட அமைச்சர்களும் உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் போது அங்கு சமூகமளித்திருந்தனர்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதனம் உட்பட அவர்களின் நலன்களை கொண்ட இரு தரப்பு கூட்டு ஒப்பந்தம் இரு வருடங்களுக்கொரு தடவை புதுப்பிக்கப்பட வேண்டும். இறுதியாக 01.04 .2013ம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தம் கடந்த வருடம் மார்ச் 31-ஆம் திகதியுடன் காலாவதியாகி விட்டது

தொழிலாளர்களின் சம்பள உயர்வு கோரிக்கை , வேலை நாட்கள் குறைப்பு தொடர்பாக தோட்ட நிர்வாகங்களின் நிலைப்பாடு 19 மாதங்களாக புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடுவதில் தடைகளும் தாமதங்களும் ஏற்பட்டிருந்தன.

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தங்களுக்கு தற்போது வழங்கப்படும் 620 ரூபாய் தினசரி வேதனத்தை 1000 ஆக அதிகரிக்க வேண்டும்

அதிகரிக்கும் கொடுப்பணவு 19 மாத கால நிலுவையுடன் வழங்கப்பட வேண்டும் என கோரி தொழிலாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

புதிய கூட்டு உடன்படிக்கையின்படி நாளொன்றுக்கு 110 ரூபா அதிகரிக்கின்றது. அதிகரித்த தொகை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடக்கம் நிலுவையுடன் கிடைக்கும் என எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் கொண்டிருந்த தொழிலாளர்களுக்கு அதுவும் ஏமாற்றமாகிவிட்டது.

தொடர்புடைய தலைப்புகள்