பரராஜசிங்கம் கொலை வழக்கில் முன்னாள் முதல்வர் பிள்ளையானுக்கு விளக்க மறியல் நீடிப்பு

இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை குற்றச்சாட்டின் பேரில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதான கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசன்துரை சந்திரகாந்தன் மீதான விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

Image caption நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிள்ளையான்

கடந்த ஆண்டு இதே கால பகுதியில் குற்றப்புலனாய்வு துறையினரால் கைதான இவர் ஒரு வருடம் கடந்த நிலையில் தொடர்ந்து விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியல் கைதியான இவர் இன்று புதன்கிழமை மீண்டும் மட்டக்களப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது எதிர்வரும் இரண்டாம் தேதி வரை தொடர்ந்து விளக்கமறியலை நீடிக்கும் உத்தரவை மாஜிஸ்திரேட் மா. கணேசராசா பிறப்பித்தார்.

இக் கொலை தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களான அவரது கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் முன்னாள் தேசிய அமைப்பாளரான எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா ( பிரதீப் மாஸ்டர்) அக் கட்சியின் முன்னாள் உறுப்பினரான ரெங்கசாமி கனகநாயகம் ( கஜன் மாமா ) இராணுவ புலனாய்வை சேர்ந்த எம். கலீல் ஆகியோர் மீதான விளக்கமறியலும் அன்றைய தினம் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

2005ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25-ஆம் தேதி மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்திற்குள் வைத்து நத்தார் நள்ளிரவு ஆராதனையின் போது ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டார். சம்பவத்தில் அவரது மனைவி உட்பட சிலர் காயமடைந்தனர்.

கடந்த அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் இப் படுகொலை இடம் பெற்றிருந்த போதிலும் கடந்த வருடம் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னரே குற்றப்புலனாய்வு துறையினரால் நான்கு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதேவேளை சிவநேசதுரை சந்திரகாந்தன் தன்னை பிணையில் செல்ல அனுமதி கோரி மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதான சந்தேக நபரொருவருக்கு பிணை வழங்கும் அதிகாரம் மேல் நீதிமன்றத்திற்கு கிடையாது என சுட்டிக் காட்டப்பட்டு கடந்த மாத முற்பகுதியில் நிராகரிக்கப்பட்டது.

தொடர்புடைய தலைப்புகள்