படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை கோரி ஆர்ப்பாட்டம்

  • 19 அக்டோபர் 2016

படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்டுள்ள தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது.

Image caption ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 16 ஆவது ஆண்டு நினைவு தினம்

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 16 ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருக்கின்றது.

யாழ் ஊடக மையம் வடக்கு கிழக்கு மற்றும் தென்பகுதி ஊடக அமைப்புக்களின் அனுசரணையுடன் இதற்கான அழைப்பை விடுத்திருந்தது.

முன்னதாக, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவு தூணுக்கு மலர்மாலை சாத்தி மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் யாழ் பேரூந்து நிலையத்தில் இடம்பெற்றது.

வடக்கு கிழக்குப் பிரதேசங்கள் மட்டுமன்றி, தென்பகுதியைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள், ஊடக அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டனர்.

Image caption படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்டுள்ள தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தக் கோரி நிகழ்த்தப்பட்ட ஆர்ப்பாட்டம்

ராணுவ கெடுபிடிகள் நிறைந்திருந்த காலப்பகுதியில் பெரும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் யாழ்ப்பாணத்தில் இருந்த ஊடகவியலாளர் நிமலராஜன் மக்கள் அனுபவித்த கொடுமைகளை ஊடகங்களில் வெளிப்படுத்தியிருந்தார்.

மும்மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருந்த இவர் பிபிசி சிங்கள சேவையின் செய்தியாளராகவும் அப்போது பணியாற்றியிருந்தார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதி இரவு வேளை பலத்த பாதுகாப்பு பிரதேசமாகத் திகழ்ந்த யாழ்ப்பாணம் கட்டைப்பிராய் பகுதியில் இருந்த அவருடைய வீட்டில் வைத்து அவர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.

இந்தச் சம்பவத்தின்போது அவருடைய குடும்பத்தினரும் காயமடைந்திருந்தனர்.

இவர் படுகொலை செய்யப்பட்டு பல வருடங்கள் ஆகிவிட்ட போதிலும், அவருடைய கொலைக்குக் காரணமானவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.

அவர்களைக் கண்டு பிடிப்பதற்கான விசாரணைகளும் முறையாக முன்னெடுக்கப்படவில்லை என இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நிமலராஜன் மட்டுமல்லாமல், கொழும்பில் கடத்திச் செல்லப்பட்டு, பின்னர் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலளார் சிவராம், மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நடேசன் உள்ளிட்ட ஊடகவியலாளர்களின் கொலைகளுக்கும் நீதி வழங்கப்பட வேண்டும் என்று இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தின் போது கோரப்பட்டுள்ளது.

இதுவரையில் 41 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டும், காணாமல் போயுமுள்ளார்கள். ஆனால் இவர்களில் ஒருவர் சம்பந்தமாகவாவது முறையான நீதி விசாரணை நடத்தப்படவில்லை என இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது,

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்து பெருமை பேசும் அரசாங்கம் , ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்கள் மீதான அடக்குமுறைகளை நிறுத்தவும், அவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு நீதி வழங்கவும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை தாமதமின்றி நடைமுறைப்படுத்தவும் வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.