யாழ் துப்பாக்கிக்சூடு: கைதான 5 போலிஸாருக்கு நவம்பர் 4 வரை விளக்கமறியல்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொல்லப்பட்டிருப்பது தொடர்பா கைது செய்யப்பட்டிருந்த 5 காவல்துறையினரையும் நவம்பர் மாதம் 4 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ் மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இவர்களை வரும் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Image caption உயிரிழந்த யாழ் பல்கலை மாணவர்கள்

இதற்கிடையில் இந்த மாணவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தமிழ் சிவில் சமூக மையம் ஆகிய அமைப்புக்களும், ஈபிஆர்எல்எப் கட்சி உள்ளிட்ட அரசியல் தரப்புக்களைச் சேர்ந்த பலரும் வன்மையாகக் கண்டித்திருக்கின்றனர்.

மாணவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டிருப்பது குறித்து இந்தக் கண்டனங்களில் கேள்வி எழுப்பப்பட்டிருக்கின்றது.

யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் யாழ் நகரில் இடம்பெற்ற மோசமான நிகழ்வாக இந்த சம்பவத்தைப் பலரும் சுட்டிக்காட்டி, சம்பந்தப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் பக்கசார்பற்ற நிலையில் தண்டிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டி சந்திப்பகுதியில் வியாழக்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரில் ஒருவர் துப்பாக்கிச்சூட்டிலும், மற்றொருவர் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகியதிலும் கொல்லப்பட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள 5 காவல்துறையினருமே நீதிமன்ற உத்தரவுக்கமைவாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி விடுத்த உத்தரவுக்கமைய புலனாய்வு பிரிவு காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

இறந்த மாணவர்களின் இறுதிக்கிரியைகள் வரும் திங்கட்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் காரணமாக நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நிலவிய பதட்டமான சூழ்நிலை இன்று தணிந்துள்ள போதிலும், யாழ் காவல் நிலையம் பலத்த பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றது.

தொடர்புடைய தலைப்புகள்