இலங்கை: பாலியல் தொழிலுக்கு உடந்தை என சந்தேகத்தின் பேரில் கைதான முன்னாள் மேயர்

இலங்கையின் கிழக்கேவுள்ள மட்டக்களப்பு நகரில், பாலியல் தொழிலுக்கு உடந்தை என்ற சந்தேகத்தின் பேரில் மட்டக்களப்பு மாநகர முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரன் மற்றும் அவரது கணவர் ஆகியோர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Image caption பாலியல் தொழில் நிமித்தம் ஆட்கள் தங்கியிருப்பதாக கூறப்பட்ட வீடு

மட்டக்களப்பு நகரிலுள்ள அவர்களின் வீட்டுடன் இணைந்த கட்டிடத்தின் மேல் மாடியில் அறைகள் வாடகைக்கு விடப்படுகின்றது.

இவ்விடத்தில் பாலியல் தொழில் நிமித்தம் ஆட்கள் தங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து இன்று ஞாயிற்றுக்கிழமை அந்த இடத்தை சோதனையிட்ட போது சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கியிருந்த இரு பெண்களும் மூன்று ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, கட்டிட உரிமையாளர்களான முன்னாள் மாநகர மேயரும், அவரது கணவரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கைது செய்யப்பட்ட ஏழு பேரும் நீதிமன்ற நடவடிக்கையின் நிமித்தம் மஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவிருப்பதாகவும் போலீஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தொடர்புடைய தலைப்புகள்