பாலியல் தொழில் சர்ச்சையில் கைதான மட்டக்களப்பு மாநகர முன்னாள் மேயர் உட்பட நான்கு பேருக்கு விளக்கமறியல்

இலங்கையின் கிழக்கே பாலியல் தொழில் விவகாரத்தில் சந்தேகத்தின் பேரில் கைதான மட்டக்களப்பு மாநகர முன்னாள் மேயர் சிவகீத்தா பிரபாகரன் உட்பட 4 பேர் எதிர்வரும் 7 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Image caption மட்டக்களப்பு மாநகர முன்னாள் மேயர் சிவகீத்தா பிரபாகரனின் வீட்டுடன் இணைந்த கட்டிடத்தின் மேல் மாடியில் அறைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் 4 பேரும் இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் போலிஸாரால் முன்னிலைப்படுத்தப்பட்ட போது நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

மட்டக்களப்பு மாநகர முன்னாள் மேயர் சிவகீத்தா பிரபாகரனின் வீட்டுடன் இணைந்த கட்டிடத்தின் மேல் மாடியில் அறைகள் வாடகைக்கு விடப்படுகின்றது.நேற்று ஞாயிற்றக்கிழமை போலிஸாரால் அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, பாலியல் தொழில் நிமித்தம் தங்கியிருந்தாக கூறப்படும் இரண்டு பெண்களும், ஐந்து ஆண்களும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதனையடுத்தே கட்டிட உரிமையாளர்களான முன்னாள் மாநகர மேயரான சிவகீத்தா பிரபாகரன் மற்றும் அவரது கணவரான கே. பிரபாகரனும் கைது செய்யப்பட்டனர்.

சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 9 பேரில் அவரது கணவன் உட்பட ஏனைய 5 பேரும் போலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஏனைய சந்தேக நபர்களான சிவகீத்தா பிரபாகரன் மற்றும் இரு பெண்கள் உட்பட ஏனைய நான்கு பேரும் இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் ஸ்தாபக செயலாளரான சிவகீத்தா பிரபாகரன் 2007 இல் கிழக்கு மாகாணம் விடுவிக்கப்பட்ட பின்னர் நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி வேட்பாளராக போட்டியிட்டு மட்டக்களப்பு மாநகர சபைக்கு மேயராக தேர்வானார்.

2013 ஆம் ஆண்டு வரை அந்த பதவியை அவர் வகித்தார்.

விடுதலைப்புலிகளினால் அவரது தந்தை படுகொலை செய்யப்பட்டதையடுத்தே இவர் தமிழ் விடுதலைப்புலிகள் ஊடாக அரசியலில் பிரவேசித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய தலைப்புகள்