யாழ்ப்பாணத்தில் இயல்பு நிலை திரும்பியது

ஒரு நாள் கடையடைப்பையடுத்து யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடமாகாணம் இன்று புதன்கிழமை வழமைக்குத் திரும்பியுள்ளது.

இதே வேளை யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொல்லப்பட்டவர்களின் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட காவல் துறையினரை சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்ற விசேட புலனாய்வு துறையினர் தடயவியல் பரிசீலனை மற்றும் விசாரணை நடத்தினர்.

அத்துடன் ஐந்து காவல்துறை குழுக்கள் காவல்துறையைச் சேர்ந்த இருவர் மீது வாள்வெட்டு நடத்தியவர்களைக் கைது செய்ய நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

இதனிடையே, யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகின்ற சம்பவத்தை அடுத்து துன்பச் சூழலிலுள்ள அனைவரும் பொறுமை காக்க வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

உணர்ச்சிகளுக்கு ஊக்குமளிப்பதால் ஏற்படும் பின் விளைவுகளை அனைவரும் மனதில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தின் பின்னரான நிலைமை குறித்து ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைக் கேட்டுக்கொண்டுள்ளார்.