இலங்கை கிழக்கு மாகாண சபையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் படு கொலைக்கு எதிராக தீர்மானம்

  • 27 அக்டோபர் 2016

இலங்கையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து கிழக்கு மாகாண சபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை பிபிசி
Image caption மலையக மக்களும் நீதி வழங்க கோருகின்றார்கள்

கிழக்கு மாகாண சபை இம்மாத அமர்வுக்காக துனை அவைத்தலைவர் பிரசன்னா இந்திரகுமார் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) கூடியது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் ஜெ. ஜனார்த்தனன் இப் படுகொலைக்கு கண்டனம் தெரிவிக்கும் பிரேரணையை சபையில் முன் வைத்தார்.

இப் பிரேரணை மீது மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட், எதிர்க்கட்சித் தலைவர் எம். எஸ். உதுமான்லெப்பை ஆகியோரும் உரையாற்றினர்.

எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறாமல் இருப்பதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.

சம்பவம் தொடர்பாக பக்கசார்பற்ற நீதி விசாரணை நடைபெற்று குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று அந்த பிரேரணை கூறுகின்றது.

இப்பிரேரணை ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் மற்றும் போலிஸ் மா அதிபதி ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்படும் என துனை அவைத்தலைவர் பிரசன்னா இந்திரகுமார் அறிவித்தார்.

மலையகத்திலும் கண்டன போராட்டம்

இதே வேளை படுகொலையை கண்டித்து மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர் .

நுவரெலியா மாவட்டம் லிந்துல ஹென்போட் தோட்டத்தில் சிவில் அமைப்புகளின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் நடைபெற்றது.

மாணவர்களின் மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்தின் மன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பலரும் முன் வைத்தனர்