மீரியபெத்தை நிலச்சரிவு அனர்த்தத்தின் 2வது ஆண்டு நினைவு தினம்

இலங்கையில் பாரிய நிலச்சரிவு அனர்த்தம் என மீரியபெத்தை நிலச்சரிவு அனர்த்தத்தின் 2வது ஆண்டு இன்று சனிக்கிழமை உறவினர்களினால் நினைவு கூறப்பட்டது.

Image caption அரசு அளித்துள்ள மாற்றுக்குடியிருப்பு வசதிகள்

பதுளை மாவட்டம் மீரியபெத்த பகுதியிலுள்ள பெருந்தோட்டமொன்றில் 2014ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ம் திகதி இந்த பாரிய நிலச்சரிவு அனர்த்தம் ஏற்பட்டது.

சம்பவத்தில் 75 குடியிருப்புகள் , இந்து ஆலயம் உட்பட கட்டிடங்கள் புதையுண்டன. பெண்கள் , குழந்தைகள் உட்பட 37 பேர் உயிரிழந்தனர்.

உயிர் நீத்த 37 பேரும் இன்று சனிக்கிழமை சம்பவ இடத்தில் ஓன்று கூடிய அவர்களின் உறவினர்களினால் நினைவு சுடரேற்றி நினைவு கூறப்பட்டனர்

இன்றைய நாள் தங்களுக்கு தீபாவளி பண்டிகை நாளாக இருந்த போதிலும் 2014ம் ஆண்டு இதே நாளில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவு கூர்ந்ததாக கூறுகின்றார் சுப்பிரமணியம் கலைமகள்.

இந்த அனர்த்தத்தில் குடியிருப்பகளை இழந்த 75 குடும்பங்களும் அந்த பகுதியிலுள்ள தேயிலை தொழிற்சாலையொன்றிலே இரு வருடங்களாக தங்க வைக்கப்பட்டிருந்தனர்..

பாதுகாப்பான மாற்றுக் காணி இடர் முகாமைத்துவ அமைச்சினால் அடையாளம் காணப்பட்டு 75 வீடுகள் கொண்ட குடியிருப்பு தொகுதியொன்று ஏற்படுத்தப்பட்டு கடந்த இவர்களுக்கான வீடுகள் கிடைத்துள்ளன.

வீடுகளும் ஏனைய வசதிகளும் இவர்களுக்கு கிடைத்திருந்தாலும் ஏற்பட்ட உயிரிழப்புகளிலிருந்து இன்னமும் விடுபட முடியாதவர்களாவே காணப்படுகின்றனர்