இலங்கையில் மீண்டும் போரை தவிர்க்க அனைவரும் ஒன்றாக செயல்படுவோம் - சிறிசேன

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் ராணுவத்தினர் வசமுள்ள காணிகளில் 450-க்கும் மேற்பட்ட காணிகளை, அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிப்பதற்காக யாழ் அரசாங்க அதிபரிடம் ஒப்படைத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.

Image caption காணிகளற்ற குடும்பங்களுக்கு வீடுகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையளிப்பு

காங்கேசன்துறை பகுதியில் மீள்குடியேற்ற அமைச்சின் நிதியில் நல்லிணக்கபுரம் என்று பெயரிடப்பட்டுள்ள வீட்டுத் திட்டத்தில் ராணுவத்தினரால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 100 வீடுகளை, வலிகாமம் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்துள்ள காணிகளற்ற குடும்பங்களுக்கு கையளித்தபோது அவர் இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கின்றார்.

கடந்த ஒரு வருட காலமாக இடம்பெயர்ந்துள்ள மக்களுடைய காணிகளைக் கையளித்து. அவர்களை மீள்குடியேற்றும் நடவடிக்கைகள் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காணிகளை மீள கையளிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறினார்.

அண்மையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து கவலை வெளியிட்ட ஜனாதிபதி அது குறித்து சுதந்திரமான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்றார்.

இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், பாதிக்கப்பட்ட மக்களின் வறுமை நிலையைப் போக்கி அவர்களைப் பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதற்கும் அரசு நடவடிக்கைகள் எடுத்திருக்கின்றது. எனினும் இந்த செயற்பாடுகளை முன்னெடுக்கும்போது ஏற்படுகின்ற தடைகளைக் கடந்து அந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறினார்.

நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படாமலிருப்பதற்காக அனைவரும் ஒன்றிணைந்து பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்பதை வலியுறுத்திய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நல்லிணக்கத்தை உருவாக்குவதற்காகவும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் அரசாங்கம் பல வேலைத் திட்டங்களை முன்னெடுத்திருப்பதாகக் கூறினார்.

இந்த நிகழ்வில் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.