யாழ் பல்கலை மாணவர்கள் உயிரிழந்தது எப்படி? மரண விசாரணை தீர்ப்பு வெளியீடு

யாழப்பாணம் கொக்குவில் குளப்பிட்டிச் சந்திப் பகுதியில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கொல்லப்பட்ட மாணவர்களில் ஒருவர் துப்பாக்கிச்சூட்டினாலும் மற்றவர் துப்பாக்கிச் சூட்டையடுத்து இடம்பெற்ற மோதல் விபத்திலும் உயிரிழந்ததாக மரண விசாரணை தீர்ப்பில் யாழ் நீதிபதி எஸ்.சதீஸ்கரன் தெரிவித்துள்ளார்.

இந்தக் கொலை வழக்கு தொடர்பான விசாரணைகள் இன்று வெள்ளிக்கிழமை யாழ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சம்பவம் தொடர்பான தகவல்கள் சாட்சியத் தடயங்கள் இருப்பின் அவை குறித்து விசாரணைகளை முன்னெடுத்துள்ள விசேட புலனாய்வு காவல்துறையினரிடம் கையளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள 5 காவல்துறையினரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர்.

அவர்களை வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.

அக்டோபர் மாதம் 20 ஆம் திகதி நள்ளிரவு வேளையில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த யாழ் பல்கலைக்கழக மாணவர்களான விஜயகுமார் சுலக்ஷன், நடராஜா கஜன் ஆகிய இரு மாணவர்களும் கொக்குவில் குளப்பிட்டிச் சந்திப்பகுதியில் கடமையில் இருந்த காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் கொல்லப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

முதலில் இந்த மரணங்கள் விபத்து மரணம் என கூறப்பட்டிருந்த போதிலும், மருத்துவ பரிசோதனையின்போது துப்பாக்கிப் பிரயோகம் செய்திருப்பது கண்டறியப்பட்டு, இந்த மாணவர்கள் கொலை செய்யப்பட்டிருப்பதாகக் காவல் துறையினர் தெரிவித்தனர்.

இதனையடுத்து, இந்த மாணவர்கள் மீது காரணமின்றி துப்பாக்கிப் பிரயோகம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்று பல்கலைக்கழக மாணவர்கள நாடளாவிய ரீதியில் போராட்டம் நடத்தியிருந்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து பக்கசார்பற்ற நிலையில் சுதந்திரமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார்.

கொல்லப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும் என்று பிரதமரும் உறுதியளித்திருந்தார்.

இந்த நிலையிலேயே நீதிமன்றத்தின் மரண விசாரணை தீர்ப்பும் சந்தேக நபர்களுக்கான விளக்கமறியல் நீடிப்பு உத்தரவும் வந்துள்ளன.