தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமை குலைகிறதா? விக்னேஸ்வரனின் குற்றச்சாட்டும், சம்பந்தனின் பதிலும்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமையைக் குலைக்கும் வகையில் செயல்படுவதாக தன் மீது வைக்கப்படும் விமர்சனம் குறித்து இலங்கை வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கருத்துத் தெரிவித்துள்ளார். அதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனும் அதுபற்றிக் கருத்து வெளியிட்டுள்ளார்.

Image caption நாளிதழ் வெளியீட்டு நிகழ்வில் விக்னேஸ்வரன், சம்மந்தன் உள்ளிட்ட பிரமுகர்கள்

யாழ்ப்பாணத்தில் காலைக்கதிர் என்ற புதிய பிராந்திய செய்தித்தாள் வெளியீட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையில், அவர்கள் இந்தக் கருத்துக்களை வெளியிட்டனர்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமையைக் குலைப்பதற்குத் தான் செயற்படுவதாக வெளியிடப்படுகின்ற தகவல்களில் உண்மையில்லை, அத்தகைய தேவை தனக்கு இல்லை என்பதையும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் இந்த வைபவத்தில் உரையாற்றுகையில் தெளிவுபடுத்தினார்.

முதலமைச்சரின் கருத்துக்களுக்குப் பதிலளிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், கூட்டமைப்பில் உள்ள கட்சிகளிடையே கருத்து வேற்றுமைகள் இருக்கின்ற போதிலும், கூட்டமைப்பு ஒற்றுமையகச் செயற்பட வேண்டியது மிகவும் முக்கியம் என வலியுறுத்தினார்.

கூட்டமைப்பு ஒற்றுமையாகவே செயற்படுகின்றது. தொடர்ந்தும் அவ்வாறே செயற்படும் என்று சம்பந்தன் தெரிவித்தார்.

செவி வழியாகக் கேள்விப்படுகின்ற செய்திகளை உறுதிப்படுத்தாமல் வெளியிடுவதையும், மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தத் தக்க வகையில் செய்திகளை வெளியிடுவதையும் ஊடகங்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று விக்னேஸ்வரன் வலியுறுத்தினார்.

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி நடத்தப்பட்ட எழுக தமிழ் பேரணியின் முடிவில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆற்றிய உரையில் வடக்கில் பௌத்த மக்கள் இல்லாத இடங்களில் ராணுவத்தின் உதவியுடன் பௌத்த விகாரைகள் அமைப்பது குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்தக் கருத்துக்கு எதிராக சிங்கள கடும் போக்க அமைப்பாகிய பொதுபல சேன உள்ளிட்ட பௌத்த அமைப்புக்களும், சிங்கள தீவிரவாத கட்சிகளும் போர்க்கொடி உயர்த்தியிருந்தன.

பொதுபல சேன அமைப்பின் ஏற்பாட்டில் விக்னேஸ்வரனைக் கண்டித்தும், இனவாதியாகச் சித்தரித்தும் வவுனியாவில் கண்டனப் பேரணியொன்றும் நடத்தப்பட்டிருந்தது. இந்த எதிர்ப்புக்களின்போது தமக்கு உயிரச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியிருந்தார் என்பதும், தேவைப்பட்டால் அவருக்குப் பாதுகாப்பு வழங்க தயாராக இருப்பதாக ராணுவம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய தலைப்புகள்