தப்பியோடி கைதான இந்தியர்களை 24-ல் கொழும்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உத்தரவு

  • 11 நவம்பர் 2016
Image caption நீதிமன்றத்தில் முன்னிலை

தடுப்புக்காவலில் இருந்து தப்பியோடி மன்னார் பேசாலையில் வைத்து கைது செய்யப்பட்ட நான்கு இந்தியர்களையும் வரும் 24 ஆம் தேதி கொழும்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு மன்னார் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.

சட்டவிரோத சிறுநீரக விற்பனை தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த 6 இந்தியர்கள், மீரிஹானவில் உள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் தடுப்புக்காவல் நிலையத்தில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இவர்கள் ஆறு பேரும் கடந்த 8 ஆம் திகதி அங்கிருந்து தப்பியோடிவிட்டதாக காவல்துறையினர் கொழும்பு நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தனர். அவர்களைத் தேடிக் கைது செய்யுமாறு நீதவான் பிடியாணை உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த நிலையில் இந்தியாவுக்குத் தப்பிச் செல்வதற்காக பேசாலை பகுதியில் மறைந்திருந்த நான்கு பேர் இரகசிய தகவல் ஒன்றையடுத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் அளித்த தகவலின்படி, ஏனைய இருவரும் படகொன்றில் இந்தியாவுக்குத் தப்பியோடியிருப்பதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேசாலையில் பதுங்கியிருந்த நான்கு பேரையும் இந்தியாவுக்குப் படகு ஒன்றில் அழைத்துச் செல்லவிருந்ததாகத் தெரிவிக்கப்படும் ஒருவரை காவல்துறையினர் தலைமன்னார் பகுதியில் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் இன்று பிற்பகல் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, தடுப்புக் காவலில் இருந்து தப்பியோடிய நான்கு இந்தியர்களையும் வரும் 24 ஆம் திகதி கொழும்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிட்ட நீதவான், தலைமன்னாரில் கைது செய்யப்பட்டவரை 50 ஆயிரம் ரூபாய் பிணையில் செல்ல அனுமதித்துள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்