யாழ்ப்பாணம் சுகாதார ஊழியர்களின் பணி புறக்கணிப்பால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம்

  • 15 நவம்பர் 2016

யாழ்ப்பாணம் மாநகர சபையின் சுகாதார ஊழியர்கள் 194 பேரை நிரந்தர நியமனம் கோரி கடந்த ஒரு வாரகாலமாக மேற்கொண்டுள்ள பணி புறக்கணிப்பு காரணமாக யாழ் நகர வீதிகளில் குப்பை கூழங்கள் நிறைந்து தொற்றுநோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Image caption பணி புறக்கணிப்பு மேற்கொண்டுள்ள யாழ் சுகாதார ஊழியர்கள்

தற்போது பெய்து வருகின்ற மழை காரணமாக குப்பை கூழங்களில் நுளம்புகள் ( கொசுக்கள்) மற்றும் இலையான்கள் (ஈக்கள்) பெருகி பொதுமக்களின் சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கக் கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.

சுகாதாரத்துக்குக் கேடு விளைவிக்கின்ற இந்த நிலைமையைக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக குப்பைகூழங்களில் நுளம்புகள், இலையான்களை அழிப்பதற்கான மருந்து விசிறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக வடமாகாண சுகாதாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளவர்களின் கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுப்பதற்காக விதிக்கப்பட்டிருந்த காலக்கெடு முடிவடைந்திருந்ததையடுத்து இன்று செவ்வாய்க்கிழமை காலை யாழ் மாநகர சபையின் நிர்வாகச் செயற்பாடுகளை முடக்கும் வகையில் அலுவலக நுழைவாயிலில் அமர்ந்து முற்றுகை போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

சம்பவ இடத்திற்குச் சென்ற யாழ் நகர காவல் நிலைய பொறுப்பதிகாரி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து முற்றுகை போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளதாகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமது கோரிக்கைகள் நாளை புதன்கிழமை நிறைவேற்றப்படாவிட்டால் மீண்டும் தமது முற்றுகை போராட்;டம் முன்னெடுக்கப்படும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

தொடர்புடைய தலைப்புகள்