யாழ் பல்கலை மாணவர்கள் கொலை: 5 போலிசாருக்கு விளக்க மறியல் நீட்டிப்பு

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் கொலைச் சந்தேக நபர்களான 5 காவல்துறையினரின் விளக்கமறியல் வரும் டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

யாழ் பல்கலைக்கழகம் (கோப்புப்படம்)

யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டி சந்திப் பகுதியில் கடந்த மாதம் 20 ஆம் திகதி இரவு மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தபோது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் விஜயகுமார் சுகல்ஷன், நடராஜா கஜன் என்ற இரண்டு யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் 5 காவல்துறையினர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்த மாணவர்களின் கொலை தொடர்பான வழக்கு இன்று வெள்ளிக்கிழமை யாழ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, பதில் நீதவான் சரோஜினி இளங்கோவன் இந்தச் சந்தேக நபர்களை டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை பரிசோதனைக்காக கொழும்புப் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி அறிக்கை சமர்ப்பிக்குமாறு காவல்துறையினருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட 5 காவல்துறையினருடைய செயல்பாடுகள் தொடர்பில் காவல்துறை திணைக்களத்தின் உள்ளக விசாரணைகள் முல்லைத்தீவு காவல் நிலையப் பொறுப்பதிகாரி நியமிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.