இலங்கையில் இனவாதத்துக்கு எதிராக இந்து அர்ச்சகர்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கையில் இனவாதத்திற்கு எதிராக கிழக்கு மாகாணத்தில் இந்து ஆலய அர்ச்சகர்கள் சாலையில் ஓன்று கூடி செவ்வாய்க்கிழமை கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Image caption கிழக்கில் போராட்டம்

இன வாதத்திற்கு எதிரான வாசக அட்டைகளையும் நந்திக் கொடிகளையும் கைகளில் ஏந்தியவாறு இந்த போராட்டத்தில் அவர்கள் கலந்து கொண்டனர்

மட்டக்களப்பு செங்கலடி சந்தியில் நடைபெற்ற இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட இந்து அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பௌத்த மதகுருவொருவரின் செயல்பாடுகளுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து அர்ச்சகர்களினால் கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.

பௌத்தர்கள் அல்லாத இடங்களில் பௌத்த விகாரைகள் அமைத்தல் , புத்தர் சிலை வைத்த செயல்பாடுகளை அரசாங்கம் தடுக்க வேண்டும் என்ற வாசக அட்டைகளையும் போராட்டத்தில் காணக்கூடியதாக இருந்தது.

இந் நாட்டில் வாழும் சகல இனங்களும் மதங்களும் ஒற்றுமையாக வாழ வேண்டியதன் அவசியம் பற்றி இந்து ஆலய அர்ச்சகர்களின் இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான சீனித்தம்பி யோகேஸ்வரன், சா .வியாழேந்திரன் ,கிழக்கு மாகாண சபை துனை அவைத் தலைவர் பிரசன்னா இந்திரகுமார் , மாகாண சபை உறுப்பினர்களான இரா. துரைரெத்தினம் , ஞா.கிருஸ்ணபிள்ளை மற்றும் கோ. கருணாகரம் ஆகியோரும் கலந்து கொண்டு தமது ஆதரவை வழங்கினர்

கவன ஈர்ப்பு போராட்டத்தின் நிறைவாக மட்டக்களப்பு மாவட்ட இந்து குருமார் பேரவையினால் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கான மனுக்கள் அங்கு வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையளிக்கப்பட்டன.

தொடர்புடைய தலைப்புகள்