இலங்கை: கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் கடத்தலில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்கக் கோரி போராட்டம்

  • 24 நவம்பர் 2016

இலங்கையில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரான பேராசிரியர் சி.ரவிந்திரநாத் காணாமல் ஆக்கப்பட்டு 10 வருடங்களாகியும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை இதுவரையில் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பது குறித்து கிழக்கு பல்கலைக்கழக சமூகத்தினால் கவலை வெளியிடப்பட்டுள்ளது.

Image caption கிழக்கு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பதவி ஏற்று சில மாதங்கள் பின்னர் அதாவது 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் தேதி கொழும்பில் வைத்து மர்மமான முறையில் இவர் காணாமல் போயிருந்தார்.

இந்த சம்பவம் நடந்து 10வது ஆண்டை நினைவு கூறும் வகையில் இன்று வியாழக்கிழமை கிழக்கு பல்கலைக்கழக சமூகம் சம்பவம் தொடர்பான உண்மை நிலையை தற்போதைய அரசாங்கம் கண்டறிய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

காணாமல் போன துணை வேந்தர்

கிழக்கு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பதவி ஏற்று சில மாதங்கள் பின்னர் அதாவது 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் தேதி கொழும்பில் வைத்து மர்மமான முறையில் காணாமல் போயிருந்தார்.

இந்த சம்பவத்தின் 10 ஆம் ஆண்டை நினைவு கூறும் வகையில் இன்று வியாழக்கிழமை கிழக்கு பல்கலைக் கழக ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வும், அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயில் முன்பாக அமைதிப் போராட்டமொன்றும் நடைபெற்றது.

''பேராசிரியர் சி.ரவிந்திரநாத் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக உண்மை நிலை கண்டறியப்பட வேண்டும். சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் " போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கல்வி மற்றும் கல்வி சார ஊழியர்கள் இந்த அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Image caption 10 ஆம் ஆண்டை நினைவு கூறும் வகையில் இன்று கிழக்கு பல்கலைக் கழக ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வு

இந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவொன்று அரசாங்க அதிபர் ஊடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும் என ஏற்பாட்டாளர்களினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் 2004 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பில் ஏற்பட்ட பிளவு கிழக்கு பல்கலைக்கழகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. விரிவுரையாளர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டார். ஒருவர் காயமடைந்தார். அச்சுறுத்தல்களை எதிர்கொண்ட நிலையில் சிலர் பதவிகளை துறந்து நாட்டை விட்டு வெளியேறினர்.

அக்காலப்பகுதியில் பல்கலைக்கழக துணை வேந்தர் பதவியிலிருந்த கலாநிதி கே. பத்மநாதன் தனது பதவியிலிருந்து விலகிக் கொண்டார்.

இத்தகைய நெருக்கடியான சூழ்நிலையில் புதிய துணை வேந்தராக பதவியேற்று கொண்ட பேராசிரியர் சி. ரவிந்திரநாத், பதவியேற்று சில வாரங்களின் பின்னரே மர்மமான முறையில் காணாமல் போனார்.

இவர் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவத்திற்கு விடுதலைப்புலிகளிலிருந்து பிரிந்து அவ்வேளை கருணா குழுவாக செயல்பட்டவர்களே பொறுப்பு என மனித உரிமை அமைப்புகளும் மனித உரிமை செயற்பாட்டாளர்களினாலும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன அக் குழுவினரால் அவை அவ்வேளை நிராகரிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய தலைப்புகள்