லங்கா ஈ நியூஸ் இணையதளத்தின் ஆசிரியரை கைது செய்ய நீதிபதி உத்தரவு

லங்கா ஈ நியூஸ் இணையதளத்தின் ஆசிரியர் சந்தருவன் செனாதிரவை கைது செய்யுமாறு கம்பஹா மாஜிஸ்திட்ரேட் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

வழக்கறிஞர் ஹேமந்த வர்ணகுலசூரிய சமர்ப்பித்த புகாரை ஆராய்ந்த பின்னர்  கம்பஹா மாஜிஸ்திரேட் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

நீதிமன்றத்தில் கருத்து தெரிவித்த வழக்கறிஞர் வர்ணகுலசூரிய, கடந்த ஆட்சிக் காலத்தில் ரிவிர எனும் சிங்கள பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியர் உபாலி தென்னகோனை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் படம் ஒன்றை அடையாள அணிவகுப்பை நடத்துவதற்கு முன்னர் லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தில் பிரசுரித்ததாக குற்றஞ்சாட்டினார்.

இதன் முலம் அந்த இணையத்தளத்தின் ஆசிரியர் சந்தருவன் சேனாதிர நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக  வழக்கறிஞர் வாதிட்டார்.

தற்போது, இங்கிலாந்தில் வசித்து வருவதாக கூறப்படும் லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தின் ஆசிரியரை கைது செய்யும் உத்தரவு ஒன்றை சர்வதேச போலிசார் ஊடாக பிறப்பிக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட், சம்பந்தப்பட்ட உத்தரவை பிறப்பித்தார்.

இந்நிலையில்,  லங்கா ஈ  நியூஸ் இணையத்தளம் நீதிமன்றத்தை அவமதிக்கும் செய்திகளை பிரசுரித்து வருவதாக அண்மையில்  நாடாளுமன்றத்தில் குற்றம்சாட்டிய நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, ஆசிரியரை சர்வதேச  போலிசார் ஊடாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ராஜபக்ஷ ஆட்சியில் அச்சுறுத்தல்

மகிந்த ராஜ்பக்ஷே ஆட்சிக்காலத்தில் லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தின் அலுவலகம் கொளுத்தப்பட்டது.

ராஜபக்ஷவை, இந்த இணையதளமானது விமர்சித்து வந்தது. அதனால், தொடர் அச்சுறுத்தல்கள் காரணமாக அதன் ஆசிரியர் நாட்டைவிட்டு வெளியேறும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்.

இந்த இணையத்தளத்துடன் தொடர்புடைய பகுதி நேர ஓவியர் பிரகீத் எகனாலிகோடா கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் காணாமல் ஆக்கப்பட்டார்.

தொடர்புடைய தலைப்புகள்