முன்னாள் விடுதலைப்புலி தளபதி, கருணா கைது

இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்த்தின் முன்னாள் கிழக்குப் பகுதி தளபதி ’கர்னல்’ கருணா, எனப்படும், விநாயக மூர்த்தி முரளீதரன் நிதித்துறை குற்றவியல் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்று செய்திகள் கூறுகின்றன.

படத்தின் காப்புரிமை AFP
Image caption அரச வாகன துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் கருணா கைது

அரசு வாகனத்தைத் தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் அவரை இன்று காலை விசாரணைக்கு வருமாறு நிதித்துறை குற்றவியல் புலனாய்வுப் பிரிவினர் அழைத்தி்ருந்தனர். அப்போது சில மணி நேரங்கள் நடந்த விசாரணைக்குப் பிறகு அவரைக் கைது செய்ததாகப் போலிசார் கூறினர்.

இன்னும் சற்று நேரத்தில் அவர் கொழும்பு மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார் என்று தெரிகிறது.

விடுதலைப் புலிகள் இயக்கத்திலி்ருந்து 2004ம் ஆண்டு பிரிந்த கருணா, பின்னர் மஹிந்த அமைச்சரவையில், துணை அமைச்சராகவும் பணியாற்றினார்.

2004ல் கருணா வி்டுதலைப் புலிகள் இயக்கத்திலி்ருந்து பிரிந்தது, இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகள் பின்னர் இலங்கைப் படைகளால் தோற்கடிக்கப்பட வழிவகுத்தது.

கருணா லண்டனுக்கு 2007ம் ஆண்டு வந்த போது, அவர் அடையாள ஆவண மோசடி குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டு, ஒன்பது மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார் என்பது நினைவுகூரத்தக்கது.