மனித உரிமை மீறல்: முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா 4 லட்சம் நஷ்ட ஈடு தர உச்சநீதிமன்றம் உத்தரவு

சாதாரண பிரஜை ஒருவரின் மனித உரிமையை மீறியதற்காக நான்கு இலட்சம் ரூபா நஷ்ட ஈடு தருமாறு உச்ச நீதிமன்றம் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு உத்தரவிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

கம்பஹா மாவட்டத்தில் அமைந்துள்ள கிரிபத்கொட பிரதேசத்தில் வசிக்கும் அசித நாணாயக்கார எனும் நபர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பான தீர்ப்பு வழங்கிய போது நீதிபதிகள் இந்த உத்தரவைப் பிறப்பித்தனர்.

கடந்த 2010 ம் ஆண்டு முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் உத்தரவின் படி தனது வீட்டின் ஒரு பகுதி இடிக்கப்பட்டதாக மனுதாரர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இத நடவடிக்கைகளுக்கு கிரிபத்கொட போலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியும் தனது ஒத்துழைப்பை வழங்கியதாக மனு மூலம் குற்றம்சாட்டப்பட்டது.

இதன் மூலம் பிரதிவாதிகள் தனது மனித உரிமைகளை மீறியுள்ளதாகத் தீர்ப்பளிக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த மனு தொடர்பான தீர்ப்பை அறிவித்த நீதிபதிகள் இந்த நடவடிக்கையின் மூலம் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் கிரிபத்கொட போலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி மனித உரிமைகளை மீறியுள்ளதாக தெரிவித்தார்.

இதன் படி முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தனது சொந்த பணத்திலிருந்த நான்கு இலட்ச ரூபாவை மனுதாரருக்கு நஷ்டஈடாக வழங்க வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதே போன்று போலிஸ் பொறுப்பதிகாரி 50,000 ரூபாவும் அரசாங்கம் ஒரு இலட்ச ரூபாவும் நஷ்ட ஈடாக வழங்க வேண்டுமென்று இந்தத் தீர்ப்பில் மேலும் உத்தரவிடப்பட்டுள்ளது.