கோத்தாபய ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்கான தடையை நீக்க கொழும்பு நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உட்பட ஏழு சந்தேக நபர்களுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த வெளிநாடு செல்வதற்கான தடை உத்தரவை நீக்குமாறு கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை ISHARA S.KODIKARA
Image caption இலங்கை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ

கடந்த ஆட்சியின் போது, அரசாங்கத்திற்கு சுமார் 11 பில்லியன் ரூபாய்க்கு அதிகமாக நஷ்டத்தை ஏற்படுத்தியதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் மூன்று முன்னாள் கடற்படை தளபதிகள் உட்பட ஏழு சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கியபோது அவர்களின் வெளிநாட்டு பயணங்களை முடக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இன்று நீதிமன்றத்தில் கருத்து தெரிவித்த எதிர் தரப்பின் வழக்கறிஞர், சந்தேக நபர்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயண தடை உத்தரவை நீக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

அதற்கு வழக்கை தாக்கல் செய்துள்ள ஊழல் விசாரணை ஆணைக்குழு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

இதன்படி சம்பந்தப்பட்ட தடை உத்தரவை நீக்குமாறு உத்தரவு பிறப்பித்த நீதிபதி, ஆனால் சந்தேக நபர்கள் வெளிநாடு செல்ல முன்னர் அவர்கள் அதனை நீதிமன்றத்திடம் தெரிவிக்க வேண்டுமென்று உத்தரவிட்டார்.

கடந்த ஆட்சிக் காலத்தில் கலை கடல் பகுதியில் அவன்கார்ட் எனும் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு ஆயுத களஞ்சியம் ஒன்றை நடத்திச் செல்ல அனுமதி வழங்கியதன் மூலம் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் உட்பட சந்தேக நபர்கள் அரசாங்கத்திற்கு சுமார் 11 பில்லியன் ரூபாய்க்கு மேற்பட்ட நஷ்டத்தை ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் உட்பட சந்தேக நபர்களுக்கு எதிராக ஊழல் விசாரணை ஆணைக்குழு வழக்கு தாக்கல் செய்துள்ளது. 

தொடர்புடைய தலைப்புகள்