இலங்கையில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் தனியார் பஸ் ஊழியர்கள்

இலங்கையில் தனியார் பஸ் ஊழியர்கள் வெள்ளிக்கிழமை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள அதேவேளை, வழமையான போக்குவரத்து பணியில் ஈடுபட்ட அரச பஸ்கள் மீது கல் வீச்சுத் தாக்குதல்களும் இடம் பெற்றுள்ளன.

2017ம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்ட யோசனையில் வீதிப் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு எதிரான அபராதக் கட்டணம் குறைந்தபட்சம் 25 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த யோசனைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே தனியார் பஸ் ஊழியர்கள் முழு நாள் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .

இந்த யோசனை கைவிடப்பட வேண்டும் என அரசாங்கத்திடம் முன் வைத்த கோரிக்கைக்கு சாதகமான பதில் இல்லை என்கின்றார் இலங்கை தனியார் பஸ் சங்கங்களின் சம்மேளனத்தின் பிரதம செயலாளர் அஞ்சன பிரியந்தஜித் தெரிவித்தார்.

ஏற்கனவே நடைமுறையிலுள்ள 550 ரூபாய்தான் அபராதத் தொகையாக இருக்க வேண்டும் என்பதே தங்கள் கோரிக்கை என்றும் அது நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர் தெரிவிக்கின்றார்.

தனியார் பஸ் ஊழியர்களின் இந்த பணிப் புறக்கணிப்பு காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியள்ளனர்

அரச பஸ் சேவைகள் வழமை போல் இடம் பெறுகின்றன. வழமையான சேவையில் ஈடுபட்ட அரச பஸ்கள் மீது கல் வீச்சுத் தாக்குதல்களும் இடம் பெற்றுள்ளன.

திருகோணமலை , மட்டக்களப்பு, கண்டி உட்பட நாட்டின் பல பாகங்களிலும் 20 கல் வீச்சு சம்பங்கள் பதிவாகியுள்ளன. இரு பாடசாலை மாணவர்கள் காயமுற்றனர் என அரச பஸ் போக்குவரத்து துறையான இலங்கை போக்குவரத்து வாரியம் கூறுகின்றது

இதே வேளை நாட்டின் அநேகமான பிரதேசங்களில் முச் சக்கர வண்டி ஓட்டுநர்களின் பணிப் புறக்கணிப்பு காரணமாக முச்சக்கர வண்டி சேவைகளும் பாதிக்கப்பட்டிருந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.