தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் மீது தாக்குதல் நடத்திய ஈபிடிபி கட்சியினருக்கு 3 பேருக்கு இரட்டை மரண தண்டனை

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பகுதியில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் மீது ஈபிடிபி கட்சி உறுப்பினர்கள் தாக்குதல் நடத்திய வழக்கில் மூன்று பேருக்கு யாழ் மேல் நீதிமன்றம் இரட்டை மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சிவாஜிலிங்கம் (கோப்புப்படம்)

கடந்த 2001 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28 ஆம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டனர்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களாகிய மாவை சேனாதிராஜா, சிவாஜிலிங்கம் உட்பட 18 பேர் படுகாயங்களுக்கு உள்ளாகினர்.

பதினைந்து வருடங்களின் பின்னர் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் பதினைந்து தினங்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற வழக்கு விசாணையின் பின்னர் இந்த வழக்கில் இன்று புதன்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கூட்டமைப்பின் இரண்டு முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட 18 பேரைத் தாக்கிக் காயப்படுத்திய குற்றத்திற்காக மூன்று எதிரிகளுக்கும் 20 வருட கடுங்காவல் சிறைத் தண்டனையும் ஒரு லட்சம் ரூபா தண்டமும் விதித்து யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.

இந்த வழக்கில் நான்கு எதிரிகளுக்கு எதிராக சட்டவிரோதமாகக் கூட்டம் கூடி, இரண்டு பேரைக் கொலை செய்து 18 பேரைக் காயப்படுத்தியதுடன், மூன்று வாகனங்களைச் சேதப்படுத்தியது உள்ளிட்ட 47 குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி சட்டமா அதிபரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

ஈபிடிபி கட்சியின் தீவுப்பகுதி இராணுவ பொறுப்பாளராக இருந்த செபஸ்டியன் ரமேஸ் அல்லது நெப்போலியன், தீவுப்பகுதி ஈபிடிபி கட்சியின் பிரதேச சபைத் தலைவர் நடராஜா மதனராஜா அல்லது மதன், ஈபிடிபி கட்சியைச் சேர்ந்த அன்ரன் ஜீவராஜா அல்லது ஜீவன், வேலணை பிரதேச சபைத் தலைவர் நமசிவாயம் கருணாகரமூர்த்தி ஆகிய நான்கு பேர் இந்த வழக்கில் எதிரிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

இவர்களில் நெப்போலியன் மற்றும் மதன் ஆகியோர் நீதிமன்றப் பிணையில் இருந்தபோது இலங்கையில் இருந்து தப்பியோடி பிரித்தானியாவில் தலைமறைவாகியிருப்பதாக நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, நான்கு எதிரிகளில் இந்த இருவரும் இல்லாமல் வழக்கு விசாரணைகள் நடைபெற்றன. இந்த இருவருக்கும் எதிராக சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கைக்கும், பிரித்தானியாவுக்கும் இடையில் அரச தலைவர்கள் மற்றும் இருநூட்டு வெளிவிவகார அமைச்சர்கள் மட்டத்தில் தொடர்புகளை ஏற்படுத்தி, அங்கு தலைமறைவாகியுள்ள எதிரிகள் இருவரையும் இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு யாழ் மேல் நீதிமன்றம் காவல்துறையினருக்குப் பரிந்துரை செய்திருக்கின்றது.