மத்திய கிழக்கு நாடுகளுக்குபணிக்குச் செல்லும் பெண்களின் குழந்தைகள் படும் வேதனைகள் என்ன?

இலங்கையிலிருந்து தாய்மார்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப் பெண்களாக செல்வதை பிள்ளைகள் விரும்புவது இல்லை என கொழும்பில் நடைபெற்ற மாநாடொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் தாய்மார்களின் பிள்ளைகளின் பாதுகாப்பு மற்றும் நலன்களை வலுப்படுத்தும் வகையில் சேவ் த சில்ரன் (save the children) பங்களிப்புடன் இம்மாநாடு நடைபெற்றது.

யுனிசெப் (UNICEF) பிரதிநிதிகள் , கல்வி அமைச்சு , சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை , வெளி நாட்டு வேலை வாய்ப்பு பணியகம் ஆகியவற்றின் அதிகாரிகளுடன் உள் நாட்டுச் சிறுவர் நலன் சார்ந்த தன்னார்வ தொண்டர் அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு தாய்மார்கள் தொழில் பெற்று செல்வதால் குடும்ப பொருளாதாரம் போன்ற ஓரிரு சாதகமான அம்சங்கள் இருந்தாலும் பெற்றோர் பிரிதல் , பிள்ளைகளின் இள வயது திருமணம் , கல்வி இடை விலகல் , துஷ்பிரோயகம் உட்பட பாதகமான அம்சங்கள் பல இருப்பது பலராலும் இம் மாநாட்டின் போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக மத்திய கிழக்கில் தொழில் புரியும் தாய்மார்களின் பிள்ளைகள் கிளிநொச்சி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலிருந்து வருகை தந்து தங்கள் அனுபவ ரீதியான கருத்துக்களை அங்கு பகிர்ந்து கொண்டனர்.

எதிர்பார்ப்பு என்ன?

பெற்றோர் உள் நாட்டு உழைப்புடன் தங்களுடன் முழுமையாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை அவர்களில் பலரும் வெளிப்படுத்திக் கொண்டதாக கூறுகின்றார் இம் மாநாட்டில் கலந்து கொண்ட இளைஞர் அபிவிருத்தி அகத்தின் ஆலோசகரான பொன். சற்சிவானந்தம்.

அதுவே தங்கள் பாதுகாப்புக்கும் அபிவிருத்திக்கும் துணையாக இருக்கும் என்பதை அவர்களின் கருத்துக்கள் மூலம் அறிய முடிந்தது என்றும் அவர் தெரிவிக்கின்றார்.

தவிர்க்க முடியாத நிலையில் தாய் வெளிநாடு செல்ல வேண்டிய நிலை ஏற்படும் போது தங்களின் பராமரிப்புக்கு பொறுப்பான சிறிய தாய் உட்பட உறவுகளுக்கு தங்களை கையாள்வது தொடர்பாக பயிற்சி வழங்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அவர்களிடம் காணப்படுகின்றது என்றும் பொன். சற்சிவானந்தம் குறிப்பிடுகின்றார்.

பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் போதும் நாடு திரும்பிய பின்னரும் குடும்பங்களில் ஏற்படுகின்ற மாற்றங்கள் தொடர்பாக ஆராய்ந்து அதற்கு பரிகாரம் காண்பதற்கான திட்டங்கள் எதுவும் உள் நாட்டில் இல்லை என்று சுட்டிக்காட்டப்பட்டது.