இலங்கை: வடமாகாண சபை பட்ஜெட் கூட்டத்தில் அமளி

  • 21 டிசம்பர் 2016

இலங்கை, வட மாகாண சபையின் வரவு செலவுத் திட்ட கூட்டத்தின் குழு நிலை விவாதம் இன்று (புதன்கிழமை) காலை ஆரம்பமாகிய போது, உறுப்பினர் சயந்தன் முதலமைச்சரைக் குறை கூறும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதையடுத்து, சபையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.

சயந்தனின் கருத்தை தொடர்ந்து உறுப்பினர் சிவாஜிலிங்கம் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட முனைந்தார். தொடர்ந்து சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

சபையினரின் கூச்சல் குழப்பத்தைக் கட்டுப்படுத்த அவைத் தலைவர் சிவிகே.சிவஞானம் முயன்ற போதிலும், கூச்சலும், குழப்பமும் அதிகமாகியதையடுத்து, சபை ஒரு மணித்தியாலம் ஒத்தி வைக்கப்பட்டதன் பின்னர் மீண்டும் கூடியது.

சபை மீண்டும் கூடியவுடன், தன்னால் சபையில் குழப்பம் ஏற்பட்டிருந்தால். அதற்காக மன்னிப்பு கேட்பதாக உறுப்பினர் சிவாஜிலிங்கம் சபையில் தெரிவித்ததையடுத்து, அதனை அவருடைய பெருந்தன்மை மிக்க முன்னுதாரணமான நடவடிக்கையாக ஏற்றுக்கொள்வதாக உறுப்பினர் சயந்தன் தெரிவித்தார்.

அதனையடுத்து சபையின் குழுநிலை விவாதம் தொடர்ந்து இடம்பெற்றது.

இதற்கிடையில், காணி தொடர்பான விடயங்களைக் கையாள்வது சவால் மிகுந்த காரியமாகவே உள்ளது என முதலமைச்சரின் கீழான அமைச்சுகளுக்கான நிதியொதுக்கீட்டு குழு நிலை விவாவதத்தில் உரையாற்றிய முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியள்ளார்.

ராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ள அரச காணிகள் மற்றும் பொதுமக்களுடைய காணிகளை விடுவித்துக் கொள்ள முடியாத நிலைமையே காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் தலையீடு காரணமாக மாகாண சபையின் கவனத்திற்குக் கொண்டு வரப்படாமல், அபகரிக்கப்பட்டு வருவது குறித்து அடிக்கடி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கின்றது என்று வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

மாகாணங்களுக்கு அதிகார பகிர்வின் கீழ் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை 13-ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தையொட்டி தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றது. எனினும், அந்த அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்க, குறிப்பாக வடமாகாண சபைக்கு வழங்க மத்திய அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது