பொதுச் செயலர் பதவிக்கு தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய சென்றபோது ஆதரவாளர் தாக்கப்பட்டதாக சசிகலா புஷ்பா புகார்

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சசிகலா புஷ்பாவின் ஆதரவாளர்கள் மீது சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது.

அ.தி.மு.கவின் மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வருபவர் சசிகலா புஷ்பா. இவருக்கும் தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினருக்கும் தில்லி விமான நிலையத்தில் கைகலப்பு ஏற்பட்டதால் உருவான சர்ச்சையையடுத்து சசிகலா புஷ்பாவை கட்சியிலிருந்து நீக்குவதாக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

ஆனால், நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. உறுப்பினராகவே சசிகலா புஷ்பா தொடர்ந்து வருகிறார்.

ஜெயலலிதா மறைந்துவிட்ட நிலையில், அக்கட்சியின் பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் நாளை சென்னையில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், இன்று பிற்பகலில் சசிகலா புஷ்பாவின் வழக்கறிஞர் ஒருவரும் ஆதரவாளர்கள் சிலரும் அ.தி.மு.கவின் தலைமையகத்திற்கு வந்தனர். அவர்கள் வரும் தகவலறிந்து அங்கு ஏற்கனவே கூடியிருந்த அ.தி.மு.க. தொண்டர்கள், அவர்களைச் சூழ்ந்துகொண்டு தாக்கினர்.

சசிகலாவை சந்தித்த துணைவேந்தர்களை பதவி நீக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

இதில் ஒருவருக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது. அவர் காவல் துறையினரால் அப்புறப்படுத்தப்பட்டார். அதற்குப் பிறகு அந்தப் பகுதியில் காவல் துறையினரின் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.

இச் சம்பவம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய சசிகலா புஷ்பா, ''அதிமுகவின் பொது செயலாளர் பதவிக்குப் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வதற்காகத்தான் எனது வழக்கறிஞர் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்றார். நாளை ரகசிய முறையில் தேர்தல் நடைபெறவுள்ளதாக நாங்கள் அறிந்தோம். எனது வேட்புமனு, எனது வழக்கறிஞரின் வேட்புமனு மற்றும் மும்பையை சேர்ந்த மற்றொரு நபரின் வேட்புமனு ஆகியவற்றை தாக்கல் செய்ய சென்ற நேரத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளது,'' என்றார்.

தொடர்புடைய தலைப்புகள்