மட்டக்களப்பு : காணிகளை விடுவிக்கக் கோரி சாலையில் இறங்கி பிரார்த்தனை போராட்டம்

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் போலிஸாரின் பாவனையிலுள்ள தமக்குரிய காணியை விடுவிக்கக் கோரி தரும ஸ்தாபனமொன்றை சேர்ந்தவர்கள் இன்று சனிக்கிழமை சாலையில் இறங்கி பிரார்த்தனை வழியான கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதான நெடுஞ்சாலையிலுள்ள மைலம்பாவெளி போலிஸ் காவல் நிலையம் அமைந்துள்ள குறித்த காணிக்கு முன்பாக இந்த போராட்டம் நடைபெற்றது.

தரும ஸ்தாபனத்தின் பராமரிப்பிலுள்ள சிறுவர்கள் , பெண்கள் உட்பட பலரும் கலந்து கொண்ட இற்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா. சிறிநேசன் , சா. வியாழேந்திரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர் கோ. கருணாகரம் ஆகியோரும் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை தெரிவித்துக் கொண்டனர்.

ஏற்கனவே தனியாருக்கு சொந்தமானி இந்த காணி 1990ம் ஆண்டு தொடக்கம் இராணுவம் , சிறப்பு அதிரடிப் படை மற்றும் போலிஸ் என அவர்களுக்கிடையே மாறி மாறி கையளிக்கப்பட்ட நிலையில் தற்போது போலிஸ் காவல் நிலையம் அமைந்துள்ளது.

போருக்குப் பின்னர் தரும ஸ்தாபமான சுவாமி ராமதாஸ் நிறுவனத்தினால் இந்த காணியும் அண்மித்த காணியும் கொள்வனவு செய்யப்பட்டு பல்வேறு வாழ்வாதார திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த காணியையும் கட்டிடத்தையும் போலிஸார் இதுவரை விடுவிக்கப்படாத நிலையில் தங்களால் உத்தேசிக்கப்பட்டுள்ள பேரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான வாழ்வாதார திட்டம் தடைப்பட்டுள்ளதாகக் கூறுகின்றார் நிறுவனத்தின் முகாமையாளரான ராஜதுரை முருகதாஸ்.

''2013ம் ஆண்டு தொடக்கம் இந்த காணியை மீள பெறுவது தொடர்பாக ஜனாதிபதி வரை தங்களால் கோரிக்கை மனு அனுப்பி வைக்கப்பட்டும் இதுவரை சாதகமான பெறுபேறு கிடைக்கவில்லை "என்றும் அவர் தெரிவிக்கின்றார்.

போலிஸ் அதிகாரிகளை சந்தித்து இதனை விரைவாக கைளிக்குமாறு தங்களால் கோரிக்கை முன் வைக்கப்படும் சந்தர்ப்பங்களில் பொருத்தமான மாற்றுக் காணி கிடைத்தவுடன் கைளிக்கப்படும் என்ற பதில் மட்டும் தான் கிடைப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டுகின்றார்.

தொடர்புடைய தலைப்புகள்