இலங்கை: அம்பாரை வழிபாட்டு தளத்தில் இஸ்லாமியர்களுக்கு அனுமதி மறுப்பு

இலங்கையின் கிழக்கே அம்பாரை மாவட்டத்தில் இஸ்லாமியர்களின் வழிபாட்டு தைக்காவொன்றில் அவர்களின் வழிபாட்டுஉரிமை மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Image caption வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம்கள் புகார்

250 வருடங்கள் பழமை வாய்ந்த தைக்கா என உள்ளுர் முஸ்லிம்களினால் கூறப்படும் பொத்தானை தைக்கா அமைந்துள்ள பகுதி தொல் பொருள் ஆய்வுத் தினைக்களத்தினால் தற்போது அடையாளமிடப்பட்டு வெளியார் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடையை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இது தொடர்பான அந்த அறிவித்தலில் கூறப்பட்டுள்ளது.

இந்த தடை தொடர்பான அறிவித்தல் அந்த இடத்தில் பகிரங்கமாக வெளியிடப்பட்டுள்ளதால் தைக்கா நிர்வாகம் உள்பட வெளியார் எவரும் பிரவேசிக்க முடியாதிருப்பதாக பொத்தானை அமீருல் ஜப்பாரூல் ஹமதானி தைக்கா நிர்வாகத் தலைவரான எம். ஏ. ஜுனைதீன் தெரிவித்தார்.

திருக்கோவில் பிரதேச செயலக நிர்வாகத்திலுள்ள சாகாமம் பகுதி யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தமையால் முஸ்லிம்களினால் அந்த பகுதிக்குள் செல்லமுடியாத நிலை காணப்பட்டது.

இதன் காரணமாக பொத்தானை தைக்காவிலும் மத அனுஷ்டானங்கள் தடைப்பட்டிருந்தன. போர் முடிவுக்கு வந்த நிலையில் 4-5 வருடங்களாக மத அனுஷ்டானங்கள் மீண்டும் நடைபெற்று வரும் வேளையில் தொல் பொருள் ஆய்வு தினைக்களத்தினால் இந்த தடை தொடர்பான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக தைக்கா நிர்வாகம் கூறுகின்றது.

Image caption அமைச்சர் ரவூ ப் ஹக்கீம் தைக்காவை பார்வையிட சென்றிருந்தார்

தைக்காவிற்குரிய இரண்டரை ஏக்கர் நிலத்திற்கும் 1990ம் ஆண்டு மே மாதம் மாவட்ட அரசாங்க அதிபரால் சட்ட ரீதியாக காணி உரிமை பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் எம். ஏ. ஜுனைதீன் தெரிவிக்கின்றார்.

தற்போது அம்பாரை மாவட்டத்தில் தங்கியுள்ள ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தொல் பொருள் ஆய்வு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பகுதியை நேரில் சென்று பார்வையிட்டு தைக்கா நிர்வாகத்துடனும் அங்கு கலந்துரையாடலொன்றை நடத்தினார்.

Image caption அமைச்சர் ரவூப் ஹக்கீம் தைக்கா நிர்வாகத்துடன் கலந்துரையாடல்

''தொல் பொருள் ஆய்வுக்குரிய பகுதியாக அடையாளமிடப்பட்டிருந்தாலும் மத அனுஷ்டானங்களுக்கு அது எவ்விதத்திலும் தடையாக இருக்க கூடாது '' என இந்த கலந்துரையாடலின் போது அவர் தெரிவித்தார்.

இந்த தடை விவகாரம் மற்றும் தொடர்ந்தும் மத அனுஷ்டானங்களை முன்னெடுப்பதற்கான அனுமதி குறித்தும் தொல் பொருள் ஆய்வுத் தினைக்கள அதிகாரிகளுடன் பேசி சாதகமான முடிவை பெற்றுத்தரப்படும் என்ற உறுதியும் உத்தரவாதமும் தங்களுக்கு அமைச்சரிடமிருந்து கிடைத்துள்ளதாக பிபிசி தமிழோசையுடன் பேசிய தைக்கா நிர்வாக தலைவரான எம். ஏ ஜுனைதீன் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்