ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இலங்கையிலும் போராட்டம்

  • 21 ஜனவரி 2017

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு காலி முகத்திடலில் இந்த போராட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடாத்தப்பட வேண்டும் எனவும், பீட்டா அமைப்பு தடை செய்யப்பட வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தை போலவே இலங்கையில் நடந்த போராட்டத்திலும் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து இன்று மாலை திருகோணமலை நகரசபைக்கு முன்னாள் அமைந்துள்ள திருவள்ளுவர் திருவுருவச்சிலைக்கு முன்பாக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Image caption திருகோணமலை நகரசபைக்கு முன்னாள் அமைந்துள்ள திருவள்ளுவர் திருவுருவச்சிலைக்கு முன்பாக நடந்த ஆர்ப்பாட்டம்

தமிழ்த்தேசிய பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் தமிழகத்தின் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது,

வடமாகாண சபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன், எம்.கே.சிவாஜலிங்கம் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள், இதில் கலந்து கொண்டனர்.

தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த தமிழகத்தின் போராட்டத்திற்குத் தாங்கள் தொடர்ந்து ஆதரவளிப்போம் என்று இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்கு எதிரான தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்களினால் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதுவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.