கிழக்கு பல்கலையில் விடுதி வசதி கோரி மாணவர்கள் போராட்டம்

  • 21 ஜனவரி 2017

இலங்கையில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் விடுதி வசதி உரிமைப் போராட்டம் காரணமாக பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களின் விரிவுரைகளும் மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தப்பட்டுள்ளது.

இன்று சனிக்கிழமை காலை 8.00 மணிக்கு பின்னர் பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவர்கள் நடமாட்டத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாணவர்களுக்கும் விடுதி வசதி கோரி பல்கலைக்கழக நிர்வாக கட்டிடத்தை மாணவர்கள் முற்றுகையிட்டு மாணவர்கள் தங்கியிருப்பதால் எழுந்துள்ள நெருக்கடி நிலை காரணமாகவே பல்கலைக்கழக பேரவை கூடி இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.

பல்கலைக்கழக பேரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பாக பதில் துணை வேந்தர் டாக்டர் கே. ஈ. கருணாகரன் விடுத்துள்ள அறிவித்தலில் அனைத்து மாணவர்களுக்கும் விடுதி வசதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2ம் ஆண்டு மற்றும் 3ம் ஆண்டு மாணவர்களுக்கு பல்கலைக்கழக வளாகத்திற்கு வெளியே அந்த வசதி ஏற்படுத்திக் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

சௌக்கிய பராமரிப்பு ( மருத்துவ ) பீடம் உட்பட அனைத்து பீட மாணவர்களுக்கும் இன்று சனிக்கிழமை காலை 8.00 மணி தொடக்கம் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நடமாட்டத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ள கிழக்கு பல்கலைக்கழக பேரவையின் தீர்மானம் கூறுகின்றது

'' பல்கலைக்கழக வளாகத்திற்குள் தொடந்து தங்கியிருக்கும் மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் ''என்றும் அந்தத் தீர்மானத்தில் மாணவர்களுக்க அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாணவர்களுக்கும் விடுதி வசதி கோரி 2ம் 3ம் ஆண்டு மாணவர்கள் கடந்த ஒரு வாரகாலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

பல்கலைக்கழக நிர்வாக கட்டிடத்தை முற்றுகையிட்டு தங்கள் உடமைகளுடன் மாணவர்கள் அங்கு தங்கியிருந்த மாணவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு நிர்வாகத்தினால் இரு நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் மாணவர்கள் வெளியேற மறுத்து வந்தனர். என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது