ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் பிள்ளையானுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை

  • 24 ஜனவரி 2017

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை சம்பந்தமாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்று கூ றப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளதாக சட்ட மா அதிபர் உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தன்னை விடுதலை செய்யுமாறு கோரி சிவநேசதுரை சந்திரகாந்தன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு இன்று அழைக்கப்பட்ட போது அரச தரப்பின் வழக்கறிஞர் இதனை தெரிவித்தார்.

நீதிமன்றத்தில் கருத்துக்களை தெரிவித்த அரச தரப்பின் வழக்கறிஞர் பிள்ளையானின் உத்தரவிற்கு அமையவே நாடாளுமன்ற உறுப்பினர் பரராஜசிங்கம் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

சாந்தன் எனும் நபர் இந்த வழக்கை மேற்கொண்டுள்ளதாக கூறிய அரச தரப்பின் வழக்கறிஞர் இது சம்பந்தமாக பிள்ளையான் உட்பட சில நபர்களுக்கு எதிராக மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுமென்று அறிவித்தார்.

இந்த கருத்துக்களை நிராகரித்த மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் போதிய ஆதாரங்களின்றி பிள்ளையானை காவல்துறை தடுத்து வைத்துள்ளதாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

கருத்துக்களை ஆராய்ந்த நீதிபதிகள் சம்பந்தப்பட்ட மனுவை முன்கொண்டு விசாரணை செய்ய அனுமதி வழங்கினர்.

மனு மீதான விசாரணை அடுத்த மே மாதம் 30 திகதி நடைபெறவுள்ளது.