மலையகத்தில் முதல் முறையாக காணி உரிமையுடன் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் கையளிப்பு

  • 9 பிப்ரவரி 2017

இலங்கையில் மலையக பெருந்தோட்ட பிரதேசத்தில் காணி உரிமையுடன் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளைக் கொண்ட முதலாவது கிராமத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வியாழக்கிழமை திறந்து வைத்தார்.

'' ஊட்டுவள்ளி புரம் '' பெயரிடப்பட்டுள்ள இக் கிராமத்தில் குடியிருப்புகளை பெற்றுள்ள குடியிருப்பாளர்களுக்கு அரசாங்கத்தின் '' பசுமை பூமி '' திட்டத்தில் காணி உரிமைக்கான அதிகாரபூர்வ உறுதி பத்திரங்களையும் ஜனாதிபதி உரிமையாளர்களிடம் வழங்கினார்.

நுவரெலியா மாவட்டம் அக்கரைப்பத்தனை பிரதேசத்திலுள்ள கோல்புரூட் தோட்டத்தில் 150 வீடுகளை கொண்ட இந்த வீடமைப்பு தொகுதியில் முதல் தொகுதியில் பூர்த்தியடைந்த 71 வீடுகள் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டன.

'' எங்கள் நிலத்தில் எங்கள் வீடு '' என குடியிருப்பாளர்களுக்கு கிடைத்துள்ள காணி உறுதியுடனான இந்த குடியிருப்பு வசதி 150 வருடங்கள் வரலாற்றை கொண்ட மலையக பெருந்தோட்ட வரலாற்றில் பெருந்தோட்ட குடியிருப்பாளர்களின் காணி உரிமை போராட்டத்தின் ஒரு அத்தியாயம் என கருதப்படுகின்றது.

மலையக புதிய கிராமங்கள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சினால் 7 பேர்ச் காணி உரிமையுடன் அமைக்கப்பட்டுள்ள வீடுகள் 550 சதுர அடியில் இரு படுக்கை அறைகள் , வரவேற்பு அறை உட்பட சகல வசதிகளையும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.

மலையக புதிய கிராமங்கள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் நடைபெற்ற இது தொடர்பான நிகழ்வில் அமைச்சர்களான அர்ஜுனா ரணதுங்க , பைசார் முஸ்தபா , மனோ கணேசன் வி.ராதாகிருஸ்ணன் மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்கா உட்பட பலரும் கலந்து கொண்டனர்

இந் நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா நாட்டின் பொருளாதாரத்தின் பிரதான பங்காளிகளான மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் ஏழ்மையிலிருந்து விடுபட வேண்டியதன் அவசியம் பற்றி வலியுறுத்தினார்.

போதைக்கு அடிமையாகியிருப்பதே அம்மக்களின் ஏழ்மைக்கும் வறுமைக்கும் பிரதான காரணம் என்பதை தனது உரையில் சுட்டிக்காட்டிய அவர் அதிலிருந்து விடுபட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இந் நிகழ்வின் பின்பு கொட்டக்கல்லையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அழைப்பின் பேரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றிலும் ஜனாதிபதி கலந்து கொண்டார்.