மட்டக்களப்பில் அகழ்வு பணியில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் முறக்கட்டான்சேனை ராணுவ முகாமுக்கு அருகாமையிலுள்ள தனியார் காணியில் மனித எச்சங்கள் என சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில் நீதிவான் முன்னிலையில் நடைபெற்ற அகழ்வுப் பணிகள் இன்று இரண்டாவது நாள் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவுபெற்றன.

மட்டக்களப்பில் அகழ்வு பணியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள்

மட்டக்களப்பு மாவட்ட மேலதிக நீதிபதி எம் .ஐ.எம். ரிஸ்வி முன்னிலையில் நேற்று திங்கட்கிழமையும் இன்று செவ்வாய்க்கிழமையும் அகழ்வு பணிகள் நடைபெற்றன.

இந்த அகழ்வுப் பணிகளின் போது மனித எச்சங்கள் என சந்தேகிக்கப்படும் எலும்பு துண்டுகள் , சில கம்பி துண்டுகள் , மனித பல் மற்றும் இரு வெள்ளிச் சங்கிலி துண்டுகள் உட்பட சில தடயங்கள் மீட்கப்பட்டதாக கூறப்படுகின்றது

1990ம் ஆண்டு முதல் 1914 ம் ஆண்டு வரை 24 வருடங்களாக முறக்கட்டான்சேனை ராணுவ முகாம் பாவனையிலிருந்த காணி மற்றும் குடியிருப்புகளின் ஒரு பகுதி, யுத்தம் முடிவடைந்த நிலையில் 2014ம் ஆண்டு ஜுலை மாதம் உரிமையாளர்களிடம் மீளக் கையளிக்கப்பட்டன.

காணி உரிமையாளரொருவர் தனது வீட்டுக்கான கழிப்பறை குழி வெட்டிய போது மனித எச்சங்கள் என சந்தேகிக்கப்படும் பொருட்கள் குறித்த தடயங்கள் தென்பட்டதையடுத்து கடந்த வருடம் அக்டோபர் மாதம் 29ம் தேதி முதல் நீதிமன்ற உத்தரவின் பேரில் கட்டிட நிர்மாணப் பணிகள் இடை நிறுத்தப்பட்டன.

அகழ்வுப் பணிகள் முடிவடைந்த நிலையில் 3 மாதங்களுக்கு மேலாக இடை நிறுத்தப்பட்டுள்ள நிர்மாணப் பணிகளை தொடர நீதிமன்ற அனுமதி தங்களுக்கு கிடைத்துள்ளதாக காணி உரிமையாளரான வானதி உதயகுமார் தெரிவிக்கின்றார்.

மூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்