அரசு துறைகளில் வேலை கோரி மட்டக்களப்பில் பட்டதாரிகள் போராட்டம்

இலங்கையில் கிழக்கு மாகாணத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் அரசு துறைகளில் வேலை வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மட்டக்களப்பு
படக்குறிப்பு,

மட்டக்களப்பு நகரில் காந்தி சதுக்க முன்றலில் நேற்று செவ்வாய்க் கிழமை காலவரையற்ற போராட்டம் தொடங்கியது.

மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகள் அரசு துறைகளில் வேலைவாய்ப்பு உட்பட சில கோரிக்கைகளை முன் வைத்து மட்டக்களப்பு நகரில் காந்தி சதுக்க முன்றலில் நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பித்த காலவரையற்ற சத்தியாக்கிரக போராட்டம் இன்று புதன்கிழமை இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.

இந்த போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பாகங்களிலிருந்தும் பெண்கள் உட்பட ஏராளமான வேலையற்ற பட்டதாரிகள் கலந்து கொண்டு தங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் குரல் எழுப்புகின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் சுமார் 5500 பட்டதாரிகள் தொழில் இன்றி இருப்பதாக வேலையற்ற பட்டதாரிகள் சார்ந்த அமைப்புகள் கூறுகின்றன..

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள தகவலில் அம் மாவட்டத்தில் மட்டும் சுமார் 1500 வேலையற்ற பட்டதாரிகள் இருப்பதாக அறியமுடிகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் காலவரையற்ற சத்தியாக்கிரக போராட்டத்தில் பிரதான கோரிக்கையாக மத்திய மற்றும் மாகாண அரச துறைகளில் போட்டிப் பரீட்சை இன்றி தொழில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பிரதான கோரிக்கையாக முன் வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பட்டதாரிகளுக்கான தொழில் வாய்ப்புக்கான வயது எல்லை 36 ஆகும். வயது எல்லை 45 என அதிகரிக்கப்பட வேண்டும்.

ஏற்கனவே அரச துறைகளில் தொழில் புரிபவர்கள் பட்டதாரிகளுக்கான தொழில் வாய்ப்புகளின் போது உள் வாங்கப்படக் கூடாது

பட்டதாரி சான்றிதழ் பெற்ற திகதியை கருத்தில் கொண்டு மூப்பு அடிப்படையில் தொழில் வாய்ப்பு கிடைப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.போன்ற கோரிக்கைகளும் இந்த போராட்டத்தில் பட்டதாரிகளினால் வலியுறுத்தப்படுகின்றன.

ஏற்கனவே இது போன்ற போராட்டங்களின் போது முதலமைச்சர் , நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண அமைச்சர்கள் உட்பட அதிகாரத்திலுள்ளவர்களினால் உறுதி மொழிகளும் உத்தரவாதங்களும் தரப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் கூறுகின்றது.

அந்த உறுதி மொழிகளும் உத்தரவாதங்களும் இதுவரை நடைமுறைக்கு வரவில்லை என்றும் வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் சுட்டிக் காட்டப்படுகின்றது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்