மட்டக்களப்பில் அரசு அதிகாரி மீது துப்பாக்கிச் சூடு: சிறப்புக் குழுக்கள் விசாரணை

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி அதிகாரம் தொடர்புடைய அதிகாரியொருவர் மீதான துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பாக இரு சிறப்பு குழுக்களால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக போலிஸார் தெரிவிக்கின்றனர்.

கண்டன ஆர்ப்பாட்டம்
படக்குறிப்பு,

கண்டன ஆர்ப்பாட்டம்

சம்பவம் தொடர்பாக இதுவரையில் 15-க்கும் மேற்பட்டவர்களிடமிருந்து வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று புதன் கிழமை இரவு அரச காணி சீர் திருத்த ஆணையத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி இயக்குநரான என். விமல்ராஜ் களுதாவளையிலுள்ள அவரது வீட்டில் வைத்து சுடப்பட்டார்.

மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றிருந்த அடையாளந் தெரியாத ஆட்களினால் சுடப்பட்ட அவர் வயிற்றிலும் கையிலும் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

கவனஈர்ப்பு போராட்டம்

துப்பாக்கி தாக்குதலைக் கண்டித்து இன்று வியாழக்கிழமை நண்பகல் மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்களும் அதிகாரிகளும் செயலகம் முன்பாக ஒன்று கூடி தமது கண்டணத்தை வெளிப்படுத்தினர்.

படக்குறிப்பு,

சுடப்பட்ட விமல்ராஜ்

அரச பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் இந்த கவன ஈர்ப்பு போராட்த்தில் அவர்களால் வலியுறுத்தப்பட்டது.

பக்க சார்பற்ற விசாரனை நடத்தி சூத்திரதாரிகள் விரைவாக கைது செ ய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்திருக்கின்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் போருக்கு பின்னர் அரச காணிகள் அரசியல் பின் புலம் உட்பட பலராலும் அபகரிக்கப்படுவதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதன் பின் புலத்திலே இந்த துப்பாக்கி சூடு இடம் பெற்றிருக்கலாம் என பொது மக்கள் மத்தியில் சந்தேகங்களும் எழுந்துள்ளன.

அரச காணிகளை சட்ட விரோதமாக அபகரிக்க முற்படுபவர்களுக்கு எதிராக குறித்த அதிகாரியினால் ஏற்கனவே சட்ட ரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இருந்த போதிலும் சம்பவத்தின் பின்னனி மற்றும் தொடர்புடையவர்கள் தமது ஆரம்ப விசாரனைகளில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என போலிஸார் குறிப்பிடுகின்றனர்.