அரசு அதிகாரி மீது துப்பாக்கி சூடு: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கையின் கிழக்கே காணி அதிகாரியான நேசகுமார் விமலராஜ் மீதான துப்பாக்கி சூட்டு சம்பவத்தை கண்டித்தும் சூத்திரதாரிகள் விரைவாக அடையாளம் காணப்பட்டு முன் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை அரசாங்கத்திடம் வலியுறுத்தியும் இன்று வெள்ளிக்கிழமை களுவாஞ்சிகுடியில் பொது மக்கள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மக்கள் ஆர்ப்பாட்டம்
படக்குறிப்பு,

ஆர்ப்பாட்டம்

காணி சீர்திருத்த ஆணையகத்தின் மட்டக்களப்பு மாவட்ட இயக்குநரான நேசக்குமார் விமலராஜ் புதன்கிழமை இரவு களுதாவளையிலுள்ள அவரது வீட்டில் வைத்து அடையாளந் தெரியாத ஆட்களினால் சுடப்பட்டு காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த சம்பவத்தை கண்டித்து பட்டிருப்பு தொகுதி சிவில் சமூகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டதில் தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கலந்து கொண்டனர்.

ஏற்கனவே இம் மாவட்டத்தில் போருக்கு பின்னரான காலத்தில் இரு அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள போதிலும் இதுவரையில் போலிஸாரால் சூத்திரதாரிகள் கண்டு பிடிக்கப்படவில்லை என . இது ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட அவர்களால் சுட்டிக்காட்டப்பட்டன.

மாவட்டத்தில் பணியாற்றும் அரச ஊழியர்கள் மற்றம் அதிகாரிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் இந்த ஆர்பாட்டத்தில் குரலாக ஒலித்தன.

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பாக ஐந்து போலிஸ் குழுக்கள் விசாரனைகளை முன்னெடுத்து வரும் நிலையில் அவரது உறவினர்கள் உட்பட 22 பெரின் வாக்கு மூலங்கள் இதுவரை பெறப்பட்டுள்ளன. சம்பவம் இடம் பெற்று 24 மணி நேரங்கள் கடந்தும் தொடர்புடையவர்கள் அடையாளம் காணப்படவில்லை. என போலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காணி சீர் திருத்த ஆணைக்குழுவின் கோரிக்கையின் பேரில் ஏறாவுர் - புன்னைக்குடா வீதியிலுள்ள சர்ச்சைக்குரிய காணிக்கு தற்போது போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நேசக்குமார் விமலராஜ் சர்ச்சைக்குரிய காணி தொடர்பான வழக்கு விசாரனையின் நிமித்தம் சுடப்பட்ட தினமன்று ஏறாவுர் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார். . விசாரனை எதிர்வரும் 3ம் திகதி க்கு ஓத்தி வைக்கப்பட்டுள்ளது

வயிற்றிலும் கையிலும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் அவரது சுய விருப்பத்தின் பேரிலே கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அதிகாரியொருவர் கூறினார்.

மத்திய காணி அமைச்சரின் கருத்து

இதே வேளை இந்த சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மத்திய காணி அமைச்சர் ஜோன் அமரதுங்க '' சட்டம் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம் பெற்றிருக்க மாட்டாது ''என தெரிவித்துள்ளார்.

படக்குறிப்பு,

மக்கள் ஆர்ப்பாட்டம்

காணி தொடர்பான நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதமொன்றில் கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதனை சுட்டிக் காட்டி உரையாற்றியிருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடரும் அரச காணிகளை சட்ட விரோதமாக அபகரிப்பு முயற்சிகளின் பின் புலத்திலே இந்த துப்பாக்கிச் சூடு இடம் பெற்றுள்ளதாக அவர்களால் தமது உரைகளில் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இதற்கு பதிலளித்து உரையாற்றிய அமைச்சர் ஜோன் அமரதுங்க '' வடக்கு - கிழக்கு மாகாணங்களில் காணப்படும் காணிப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது கடினமாக உள்ளது " என்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 300 - 400 ஏக்கர் அரச காணியில் பலாத்தாரமாக குடியிருப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ள நிலையிலே இந்த அதிகாரி சுடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஜோன் அமரதுங்க கூறினார்.

'' சட்டவிரோதமாக குடியிருப்பாளர்களை வெளியேற்றுவது தொடர்பாக நீதிமன்றம் உடனடியாக தலையீடு செய்து நியாயமான உத்தரவை வழங்கியிருந்தால் இந்த துப்பாக்கி சூடு இடம் பெற்றிருக்க மாட்டாது '' என்றும் அவர் தனது பதிலில் அவர் குறிப்பிட்டார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்